உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பருவமழைக்கு ஒதுக்கப்பட்ட நிதி; தி.மு.க., அரசு மீது சரவணன் சந்தேகம்

பருவமழைக்கு ஒதுக்கப்பட்ட நிதி; தி.மு.க., அரசு மீது சரவணன் சந்தேகம்

மதுரை: ''கடந்த நான்காண்டு களாக பருவ மழைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக கையாளப்பட்டதா. அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, சளி, காய்ச்சல், காலரா, வயிற்றுப்போக்கு, தோல்நோய், சுவாச நோய் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 6 முதல் 12 முறை வரையும், பெரியோர்களுக்கு 3 முதல் 4 முறை வரையும் தொற்றுநோய் பரவும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சுனாமி பேரலையை எதிர்கொண்டு மக்களை காத்தார். கடந்த 10 ஆண்டுகளில் தானே, நீலம், மடி, வர்தா, ஒக்கி, கஜா, நிவர் புயல்களை ஜெயலலிதாவும், பழனிசாமியும் சிறப்பாக சமாளித்து தொற்று நோய் பரவாமல் தடுத்தனர். தி.மு.க., ஆட்சியில் கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் போது 70 லட்சம் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர், தற்போது 20 மாவட்டங்களில் தற்போது வரை 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். ஏற்கனவே வடகிழக்கு பருவ மழையில் பத்தாயிரம் மருத்துவ முகாம் நடத்துவோம் என்று எப்போதும் போல் அமைச்சர் சுப்பிரமணியம் விளம்பரம் செய்தார். இனியாவது விளம்பரத்தை தள்ளி வைத்துவிட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். கடந்த நான்காண்டுகளாக பருவமழைக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக கையாளப்பட்டதா என்ற கேள்விக்குறி எழுகிறது. ஏனென்றால் மழைக்காலங்களில் பிளீச்சிங் பவுடர் போடாமல் கோலமாவு, மைதா மாவு துாவி ஒரு விஞ்ஞான அரசாக ஸ்டாலின் அரசு இருப்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். பருவமழைக்காக எவ்வளவு நிதி கையாளப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி