உசிலம்பட்டி: 'த.வெ.க., சென்ற செங்கோட்டையனால் அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த முடியாது' என்று சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் பேசினார். உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது : தி.மு.க., 10 கட்சிகளுடன் கூட்டணி, அ.தி.மு.க., தேசிய கட்சியோடு கூட்டணி. அவர்கள் லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டு, அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகள் என பார்க்கும் போது அ.தி.மு.க., கூட்டணி 41 சதவீதம் வைத்துள்ளது. 2026 தேர்தலில் ஆளும் கட்சியின் எதிர்ப்பு அலையால் 42 சதவீத ஓட்டு 62 சதவீதமாக மாற மக்களின் தீர்ப்பு இருக்கும். பல தொகுதிகளில் தி.மு.க., டெபாசிட்டை காப்பாற்றுமா எனத் தெரிய வில்லை. தி.மு.க., வின் ஒரே நோக்கம் உதயநிதியை முதல்வர் பதவியில்அமர வைத்து வாரிசு அரசியலுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்பதே. .அதற்காக ரூ.எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமானாலும் செலவழிப்பர். அது நேர்வழியில் முடியாது என்பதால், அ.தி.மு.க., பலவீனமாகிவிட்டது, அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார். அ.தி.மு.க., 3 ஆக, 5 ஆக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். த.வெ.க., சென்ற செங்கோட்டையனோ பொறுத்திருந்து பாருங்கள். யார், யாரெல்லாமோ வருகின்றனர் எனக்கூறி 3 மாதங்கள் ஆகிவிட்டது, அவரது நிழல் கூட அவருடன் போகவில்லை. அவரால் அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த முடியாது. கொடி பிடிக்கும் தொண்டனின் உழைப்பால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின், இரட்டை இலை செல்வாக்கால் வெற்றி பெற்றீர்கள். இனிமேல் என்ன ஆகப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும். விதவை எண்ணிக்கையை குறைக்க போவதாக கனிமொழி அக்கா கூறினார். அதற்கு லோக்சபாவில் பேசி மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா எனப் பாருங்க, என்றார்.