உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிருதுமால் நதிக்கு தேவை செட்டில்மென்ட் சர்வே வரைபடம்

கிருதுமால் நதிக்கு தேவை செட்டில்மென்ட் சர்வே வரைபடம்

மதுரை : செட்டில்மென்ட் சர்வே(1960ம் ஆண்டு) வரைபட அடிப்படையில் கிருதுமால் நதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்றகோரி காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் மதுரை நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அர்ச்சுனன், நிர்வாகிகள் மலைச்சாமி, ராமமூர்த்தி, அய்யாதுரை, ராமநாதன், அப்துல் ரஹீம், மகேந்திரன் கூறியதாவது: மதுரை வழியே ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 42 ஆயிரத்து 769 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கு ஆதாரமாக கிருதுமால் நதி உள்ளது. 1960ம் ஆண்டு செட்டில்மென்ட் சர்வே வரைபட அடிப்படையில் பார்த்தால் 120 அடி அகலவாக்கில் இருந்த கிருதுமால் நதி தற்போது சுருங்கி மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஒரு மீட்டருக்கும் குறைவாக உள்ளது. பழமை வாய்ந்த கிருதுமால் நதியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்வளத்துறை ஆவணங்களின் படி கிருதுமால் நதி ஆயக்கட்டு பாசனத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும்.விருதுநகர் மாவட்டம் அர்ஜுனா நதியில் துலுக்கபட்டி அருகில் தடுப்பணை, ராமநாதபுரம் தேவிபட்டினம் வெண்ணத்துார் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும். சேதமடைந்துள்ள ராமநாதபுரம் பெருவயல் கண்மாய் கலுங்கை சீரமைக்கவேண்டும். தேவிபட்டினம் நீர்வளத்துறை கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். வைகை கிராமம் கால்வாய், தடுத்தான் கோட்டை கால்வாய், அம்மன் பனையூர் கண்மாய், சிறுவயல் கண்மாய் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கவேண்டும்.இந்த கோரிக்கைகளை மனுவாக துணை தலைமை பொறியாளரிடம் ஒப்படைத்துள்ளோம். கிருதுமால் நதியை மீட்காவிட்டால் மே மாதம் மதுரை நீர்வளத்துறை மண்டல அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி