உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய மேலுாரில் கடையடைப்பு; போராட்டம்

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய மேலுாரில் கடையடைப்பு; போராட்டம்

மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது என வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து வர்த்தக சங்கத்தினர் மேலுாரில் கடையடைப்பு நடத்தினர்.மேலுார் அருகே 11 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிமம் தோண்டும் சுரங்க உரிமையை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மேலுாரில் விவசாய சங்கத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து வர்த்தக சங்கத்தினரும் கடையடைப்பு நடத்தி பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவ்வழியாக சென்ற அமைச்சர் மூர்த்தி போராட்டக்காரர்களிடம் பேசுகையில், ''டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் வராது. போராட்டம் வேண்டாம். கலைந்து செல்லுங்கள்,'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், விவசாய சங்க நிர்வாகிகள் ரவி, குறிஞ்சிகுமரன், வழக்கறிஞர்கள் ஸ்டாலின், பழனிசாமி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் தமிழரசன், தி.மு.க., நகர செயலாளர் முகமது யாசின், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, நகை மற்றும் அடகு கடை முன்னேற்ற நலசங்க நிர்வாகிகள் சுரேஷ், செல்வராஜ், தினசரி காய்கறி மார்கெட் சங்க தலைவர் மணவாளன், அனைத்து கட்சி, சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும். குறிப்பிட்ட கிராமங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை, தொல்லியல் பகுதியாக அறிவித்து அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வணிகர் முன்னேற்ற சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறுகையில், ''முடிவு எதுவும் ஏற்படாத நிலையில் நன்றி எதற்கு,'' என பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பிரச்னைக்கு முடிவு தெரியும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறிக் கொண்டு எழுந்து செல்ல மறுத்தனர். போராட்டம் நடத்தும் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் பெண்கள் கலைந்து சென்றனர்.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பேச்சுக்கு

அமைச்சர் எதிர்ப்புஅ.தி.மு.க., எம்.எல். ஏ., பெரியபுள்ளான் பேசுகையில்,''சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மூலம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சுரங்க திட்டத்தை ரத்து செய்வோம்,'' என்றார். அதற்கு அமைச்சர் மூர்த்தி, ''எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பாகுபாடு கிடையாது. பிரித்து பேசாமல் ஏகமானதாக மேலுார் மக்களின் ஒட்டு மொத்த கருத்து என சட்டசபையில் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை