ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
மதுரை : பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதலில் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் 2019ல் பால்வளத்துறையில் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகள் கொள்முதல் தொடர்பாக தணிக்கை நடந்தது. கிறிஸ்துதாஸ் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 கோடியே 75 லட்சத்து 33 ஆயிரத்து 953 இழப்பு ஏற்படுத்தியதாக தணிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அப்போது பதவியில் இருந்த பால்வளத்துறை இயக்குனர் சி.காமராஜ், கமிஷனர் வள்ளலார், கிறிஸ்துதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. காமராஜ், வள்ளலார் மீதான நடவடிக்கையை 2023ல் பொதுத்துறையின் கடிதம் மூலம் அரசு கைவிட்டது. கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதி மறுத்து 2022 மே 20 மற்றும்31 ல் கால்நடை மற்றும் பால்வளத்துறை உத்தரவிட்டது. அதை ரத்து செய்து ஓய்வு பெற அனுமதித்து, பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி கிறிஸ்துதாஸ் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள் இருப்பதால் சி.காமராஜ், வள்ளலார் மற்றும் மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி அடுத்தகட்ட மேல்நடவடிக்கையை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மேற்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் முறைகேடு, ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கையை மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தர விட்டார். இதை எதிர்த்து காமராஜ், வள்ளலார் மேல் முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராஜ கோபால், ஸ்ரீசரண் ரங்கராஜன், வழக்கறிஞர்கள் ஆயிரம் கே.செல்வகுமார், அப்பாதுரை ஆஜராகினர். நீதிபதிகள் உத்தரவு: மனு பகுதியாக அனுமதிக்கப்படுகிறது. அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும். சட்டப்படி மேல்நடவடிக்கையை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மேற்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் முறைகேடு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கையை மத்திய அரசின் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் மேற்கொள்ள வேண்டும் என பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கை மீண்டும் தனி நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம். அவர் மனுதாரர்கள் விளக்கமளிக்க வாய்ப்பளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.