உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  எஸ்.ஐ.ஆர்., பணி சிறப்பு முகாம் ஓட்டுச்சாவடிகளில் இன்று கடைசி: 60 சதவீத பணிகள் நிறைவு

 எஸ்.ஐ.ஆர்., பணி சிறப்பு முகாம் ஓட்டுச்சாவடிகளில் இன்று கடைசி: 60 சதவீத பணிகள் நிறைவு

மதுரை: எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று கடைசி நாளாக நடக்கிறது. இதுவரை 60 சதவீத பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்.ஐ.ஆர்.,) நவ.4ல் துவங்கி டிச.4 வரை நடக்கிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று வருகின்றனர். இப்பணிகள் துவங்கி 23 நாட்கள் ஆன நிலையில் 90 சதவீதம் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த படிவங்கள் 50 முதல் 60 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. கடந்த வாரம் முழுவதும் ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாமாக நடந்து வருகிறது. பி.எல்.ஓ.,க்கள், மேற்பார்வையாளர்கள் பகல் முழுவதும் மையங்களில் தங்கி படிவம் வழங்கி, திரும்ப பெற்று வருகின்றனர். யாரும் விடுபடக் கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நீடிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்றும் (நவ.26), கடைசி நாளாக (நவ.27) இன்றும் முகாம்கள் நடக்கின்றன. வாக்காளர் படிவம் பூர்த்தி செய்ய விரும்புவோர் இன்று மாலை 5:00 மணி வரை தங்களுக்கான ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று பி.எல்.ஓ.,க்களை சந்தித்து பெறலாம். டிச.4 வரை இப்பணிகள் நடந்து முடிந்தபின், டிச.9 ல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட உள்ளது. டிச.31 வரை சேர்க்கை, நீக்கல், திருத்த படிவங்கள் வழங்கப்பட்டு, தீவிர திருத்தப் பணியில் விடுபட்டவர்களும், புதியவர்களும் படிவங்களை வழங்கலாம். தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: வாக்காளர்கள் http://voters.eci.gov.inமுகவரியில் குடும்ப உறுப்பினரில் எவரேனும் ஒருவரது பழைய வாக்காளர் அடையாள அட்டை அல்லது 2002, 2005 ல் ஓட்டளித்த தொகுதி, ஓட்டுச்சாவடி பெயர் விவரங்களை பயன்படுத்தி தங்களுக்குரிய தகவலை பெறலாம், தங்கள் குடும்ப உறுப்பினர் அனவரது விவரங்களையும் பொருத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர் ஒருவரது பழைய வாக்காளர் அடையாள அட்டையை உதவி மையத்தில் வழங்கினால் எளிதாக, விரைவாக கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ