மதுரை விமான நிலையத்தில் பாம்புகள் பறிமுதல்
அவனியாபுரம், : இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள், பாம்புகள், பல்லிகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் மதுரை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். வேலுாரைச் சேர்ந்த ஒருவரின் உடமைகளை பரிசோதனை செய்த பொழுது, சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள் 52, பல்லிகள் 4, பாம்புகள் 8 இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அப்பயணியிடம் விசாரித்த பொழுது, இலங்கையில் புறப்படும் பொழுது ஒரு நபர் தன்னிடம் இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும் இதை மதுரை விமான நிலைய வாசலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியதாக தெரிவித்தார்.அப்பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் இந்திய வனத்துறையினரால் தடை செய்யப் பட்டவை. இதனால் அவற்றை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப் படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.