உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோலார் மின் உற்பத்தி: அரசு மருத்துவமனை கட்டடங்களின் மேல்தளங்களில் டான்ஜெட்கோ மூலம் பேனல்கள் அமைப்பு

சோலார் மின் உற்பத்தி: அரசு மருத்துவமனை கட்டடங்களின் மேல்தளங்களில் டான்ஜெட்கோ மூலம் பேனல்கள் அமைப்பு

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். அவசர அறுவை சிகிச்சை அரங்குகளில் கையாளும் கருவிகளை இயக்குவதற்கும் மின்சாரம் தேவைப்படும். அதிதீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கான வெண்டிலேட்டர், பச்சிளம் குழந்தைகளுக்கான 'இன்குபேட்டர்' வசதிக்கும், ஸ்கேன் எடுப்பது, இயந்திர சமையல், நோயாளிகளுக்கு வெந்நீர் வழங்குவது போன்ற தேவைகளுக்கும் மின்பயன்பாடு அதிகமாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் வசதி இருந்தாலும் டீசல் பயன்பாடும், அதிலிருந்து வரும் சத்தமும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதற்காக அரசின் டான்ஜெட்கோ நிறுவனம் மூலம் சோலார் பேனல் அமைக்க அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் 14 ஏக்கர் பரப்பளவில் அடுத்தடுத்து மூன்றடுக்கு, நான்கடுக்கு தளங்களாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மேல்தளம் (மொட்டை மாடி) பயன்பாடற்று உள்ளது. புதிதாக கட்டப்பட்ட ஜெய்க்கா வளாகத்தின் மேல்தளத்தில் 'ஹைபிரிட்' அறுவை சிகிச்சை தளத்திற்கான சிறப்பு கருவிகளை இயக்கும் வகையில் நிறைய வயர்கள், ஏசி பயன்பாடு உள்ளதால் ஜெய்க்கா வளாகத்தை பயன்படுத்த முடியாது. தீவிர விபத்து சிகிச்சை பிரிவு (டி.சி.சி.,), பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (எஸ்.எஸ்.பி.) வளாகங்களிலும் மொட்டை மாடி பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த மூன்று வளாகத்திற்கும் சேர்த்து மின்கட்டண செலவு மாதம் ரூ. 50 ஆயிரத்தை தொடுகிறது. இதுதவிர பழைய வளாகத்தில் இரண்டு பெரிய ஜெனரேட்டர்கள், மற்ற வளாகங்களில் இரண்டு ஜெனரேட்டர்கள் உள்ளன. இவற்றுக்கான டீசல் செலவும் அதிகம். எனவே மின்கட்டணத்தை குறைக்கும் வகையில் சோலார் பேனலை மருத்துவமனையில் நிறுவ வேண்டும். டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது: இங்கு சோலார் பேனல் நிறுவ பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) மூலம் ஏற்பாடு செய்துள்ளோம். எங்கெங்கு அமைத்து மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதற்கான முதற்கட்ட ஆய்வை தொடங்க உள்ளோம். அதன்பின் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !