உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காட்டுப்பன்றியை வி(மி)ரட்டும் சவுண்ட் பார்ட்டி

காட்டுப்பன்றியை வி(மி)ரட்டும் சவுண்ட் பார்ட்டி

மதுரை : மலைப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களில் காட்டுப்பன்றியை விரட்டும் வகையில் தனியார் நிறுவனத்தின் ஒளியுடன் ஒலியெழுப்பும் சோலார் கருவி சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளதாக வேளாண் துணை இயக்குநர் அமுதன் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தில் சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம் உட்பட மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் காட்டுப்பன்றிகளால் மகசூல் இழப்பை சந்திக்கின்றனர். காட்டுப்பன்றியை விரட்ட திரவ விரட்டி பயன்படுத்தப்பட்டது. இதன் வாசனை 10 நாட்கள் வரை காட்டுப்பன்றியை வரவிடாமல் விரட்டியது.அமுதன் கூறியதாவது: மழை பெய்யும் போது மீண்டும் காட்டுப்பன்றிகள் தாக்குதல் அதிகரித்தது. இதனால் தனியார் நிறுவனத்தின் சோலார் ஒலியெழுப்பும் கருவியை சோதனை அடிப்படையில் பேரையூர் அருகே அத்திப்பட்டி விவசாயி கண்ணன் வயலில் பொருத்தியுள்ளோம். வெளிச்சம் குறையும் போது தானாக லைட் எரிவதோடு, இதிலிருந்து எழுப்பும் சத்தத்தை கேட்டு பன்றிகள் மிரண்டு ஓடுகின்றன. வயலில் இந்த கருவியைப் பொருத்தினால் சுற்றிலும் 250 மீட்டர் துாரத்திற்கு சத்தம் கேட்கும். 10 நாட்களாக இவரது வயலில் பன்றிகள் நடமாட்டம் இல்லை. ஒரே சத்தத்திற்கு பழகிவிடும் என்பதால் வெவ்வேறு சத்தங்களை வைத்து பரிசோதனை செய்கிறோம். இந்த முறை வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்வோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ