வீடியோ வெளியானதால் விசாரிக்க எஸ்.பி., உத்தரவு
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் நகை வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் இருந்த தந்தையை வரவழைக்க, மகன்களை அழைத்து சென்று விசாரித்த வீடியோ பரவியதால், சம்பவம் குறித்து விசாரிக்க எஸ்.பி., உத்தரவிட்டார்.அலங்காநல்லுாரைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவர், மாமியார் வெள்ளையம்மாளிடம் 3 பவுன் நகை பெற்று மகன்களின் திருமணத்திற்காக அடகு வைத்தார். அதனை மாமியார் திரும்ப கேட்டபோது ஆண்டிச்சாமி தர மறுத்ததால், அலங்காநல்லுார் போலீசில் புகார் செய்தார்.சில நாட்கள் அவகாசம் கேட்ட ஆண்டிச்சாமி, நீண்ட நாட்களாகியும் தரவில்லை. கடந்த மேயில் விசாரணைக்காக சென்ற போலீசார் ஆண்டிச்சாமியை தொடர்பு கொண்டனர். முடியாததால் அவரது மகன்கள் தர்மராஜ், யுவராஜை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதனால் அவர்கள் போலீசிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் விசாரித்த வீடியோ நேற்று வைரலானது. இதையடுத்து சமயநல்லுார் டி.எஸ்.பி., தலைமையில் அலங்காநல்லுார் ஸ்டேஷன் எஸ்.ஐ., உத்தரராஜா, போலீசாரிடம் விசாரிக்க எஸ்.பி., அரவிந்த் உத்தரவிட்டார்.