உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்னும் சிக்னல் கிடைக்கல! சிலரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட ரயில்வே சுரங்கபாதை: மதுரை - போடி லைனில் 10 ஆண்டாக நீடிக்கும் ஆபத்து

இன்னும் சிக்னல் கிடைக்கல! சிலரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட ரயில்வே சுரங்கபாதை: மதுரை - போடி லைனில் 10 ஆண்டாக நீடிக்கும் ஆபத்து

நாகமலை: மதுரை - போடி ரயில்வே லைன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பத்து கிராம மக்கள் தண்டவாளத்தை ஆபத்தாக கடந்து செல்கின்றனர். மதுரை காமராஜ் பல்கலை எதிரே வட பழஞ்சி, தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, வேடர்புளியங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக திருப்பரங்குன்றம் மெயின் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் மதுரை - போடி ரயில் பாதை குறுக்கிடுகிறது. இந்த சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆலோசித்தனர். மின்சார ரயில்களுக்கான மின்கம்பிகள் அமைக்க வேண்டி இருந்ததாலும், அருகிலேயே மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும், மேம்பாலமாக அமைக்க போதிய உயரம் (எலிவேஷன்) கிடைக்காது என தீர்மானித்து சுரங்கப்பாதையாக அமைக்க முடிவு செய்தனர். ரூ.4 கோடியில் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. வடக்குப் பகுதியில் பணிகள் முடிந்த நிலையில் தென்பகுதியில் குழி தோண்டினால் கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 10 ஆண்டுகளாக முடிவு பெறாத இச்சுரங்கப் பாதையில் மழைநீர், கழிவுநீர் தேங்கி குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. கரடிப்பட்டி, செக்கானுாரணியில் இருந்து இவ்வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் வாகனங்கள், ஆபத்தை உணராமல் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றன. வாரம் 3 நாட்கள் காலை 7:00 மணி, இரவு 10:20 மணிக்கு போடி - சென்னை சென்ட்ரல் - போடி, தினமும் காலை 8:30 மணி, இரவு 7:15 மணிக்கு மதுரை - போடி - மதுரை ஆகிய ரயில்கள் இவ்வழியாக செல்கின்றன. பாதுகாப்பு கருதி இப்பகுதியில் தொடர்ந்து ஒலியெழுப்பப்பட்டு, 15 கி.மீ., வேகத்தில் மெதுவாக இயக்கப்படுகின்றன. தண்டவாளங்களுக்கு இடையே பள்ளமாக இருப்பதால் அருகிலுள்ள ஐ.டி., பார்க்கில் பணிபுரிபவர்கள் டூவீலரில் செல்கையில் தடுக்கி விழுகின்றனர். ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் தண்டவாளத்தின் நடுவே சிக்கி நின்றுவிடுகின்றன. ரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தப்படும் நிலையில், நாடு முழுதும் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் அகற்றப்பட்டு வருவதால் புதிதாக கேட் அமைக்க ரயில்வே தரப்பில் மறுக்கப்படுகிறது.

பள்ளத்திற்குள் ஆபத்து

அப்பகுதி சுந்தரபாண்டி கூறுகையில், ''சிலரின் சுயநலத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். மழை நேரங்களில் தண்டவாளத்தில் வாகனங்கள் செல்கையில் வழுக்கி விடுகின்றன. தண்டவாளங்களுக்கு இடையேயான பள்ளத்தை சமன் செய்ய வேண்டும். சுரங்கப் பாதையை மூடாததால் இரவில் ரோடு இருப்பதாக நினைத்து டூவீலரில் வந்த ஒருவர் பள்ளத்திற்குள் விழுந்து பலத்த காயமடைந்தார். அதிகாரிகள் ஆய்வு செய்தும் நடவடிக்கை இல்லை'' என்றார்.

சுரங்கபாதையை மூட வேண்டும்

கோபால் கூறுகையில், ''திருப்பரங்குன்றம் தொகுதியில் 3வது பெரிய பஞ்சாயத்து வடபழஞ்சி. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பிரச்னையால் நாகமலை சென்று பல கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் சுரங்கப் பாதையை மூட வேண்டும். பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றன'' என்றார்.

விரைவில் தீர்வு

மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறுகையில், ''எம்.பி.,க்களுடனான கூட்டத்தில் ரயில்வே உயர்மட்ட அதிகாரிகளிடம் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேம்பாலம் அமைக்க சாத்தியமில்லை என ரயில்வே தரப்பில் தெரிவித்தனர். பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகமும், ரயில்வே தரப்பும் அப்பகுதியினருடன் பேசி விரைவில் தீர்வு காண வேண்டும்'' என்றார். ரயில்வே தரப்பில் கூறுகையில், ''மாவட்டம், பஞ்சாயத்து நிர்வாகம் அப்பகுதியினரை சமரசம் செய்து ஒத்துழைப்பு வழங்கினால் சுரங்கப் பாதை பணிகளை முடிக்க தயாராக உள்ளோம். மழைநீர் தேங்காத வண்ணம் கூரை அமைப்பது, தேங்கும் நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வசதிகளுடன் அமைத்து தரப்படும்'' என்றனர். ஏற்கனவே ரூ.2 கோடி செலவு செய்துள்ளதால் சுரங்கப்பாதை அமைப்பதில் ரயில்வே உறுதியாக இருப்பதாலும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என தெரியாமல் கிராமத்தினர் சிக்கலில் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை