மின் துண்டிப்பால் குடிநீரின்றி அவதி
சோழவந்தான்:சோழவந்தான் அருகே கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி குடிநீர் தேவைக்காக வைகையில் தனித்தனியாக கிணறு, மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன.சில நாட்களுக்கு முன் கனமழை பெய்து காற்று வேகமாக வீசியது. இதில் தென்னை மரம் சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்து அறுந்ததால் மோட்டாருக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. பொதுமக்கள் வெகுவாக பாதித்தனர். தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு வழியாக மின்கம்பம் அமைத்து மின்சாரம் செல்கிறது. இதுபோன்று பலமுறை கம்பிகள் அறுந்துள்ளதால் ஆபத்து உள்ளது. எனவே வேறு வழியில் கொண்டு செல்லும்படி தோப்பு உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்ததால், பிரச்னை தீர்க்கப்படாமல் இருந்தது. நேற்று உதவி செயற்பொறியாளர் சவுந்தரராஜன், உதவி மின் பொறியாளர் பாலாஜி, எஸ்.ஐ தியாகராஜன், மண்டல துணை பி.டி.ஓ பூர்ணிமா பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிகமாக மின் இணைப்பு சீரமைக்கப்பட்டு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.