இந்திய மீனவர்களை பாதுகாக்க இலங்கையுடன் பேச்சு நடத்த வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை : இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததால் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். படகுகள், வலைகளை சேதப்படுத்துகின்றனர். பத்து ஆண்டுகளில் 1500 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாப்பதற்கான தீர்மானத்தை தமிழக அரசு 2013 ல் சட்டசபையில் நிறைவேற்றியது. மத்திய அரசுக்கு அனுப்பியது. மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.நாகப்பட்டினம், துாத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 100 பேர் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டனர். இலங்கை சிறையிலுள்ள அவர்களுக்கு சரியாக உணவு, குடிநீர் வழங்கப்படுவதில்லை. ஆக.1 ல் இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பல் மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்து இறந்தார். ஒருவர் மாயமனார்.சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாகக்கூறி 400 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 55 படகுகளை பறிமுதல் செய்தது. இது தொடர்ந்தால் நம் மீனவர்களின் எதிர்காலம் பாதிக்கும்.இந்தியா, இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லையில் இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவது, படகுகள், வலைகளை பறிமுதல் செய்வதை தடுக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மத்திய வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை செயலர்கள், தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.