உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மேகதாது அணை பிரச்னைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் பி.ஆர். பாண்டியன் பேட்டி

 மேகதாது அணை பிரச்னைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் பி.ஆர். பாண்டியன் பேட்டி

மதுரை: ''கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.,) ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீது தமிழக அரசு வழக்கு தொடராததே பிரச்னைக்கு காரணம்,'' என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இந்தியாவில் பல்வேறு நடுவர் மன்றங்கள் இருந்தாலும், காவிரி நடுவர் மன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் பார்லிமென்டின் அனைத்து எம்.பி.,க்களும் ஓட்டளித்து பெரும்பான்மை அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு இணையான சட்ட அதிகாரங்களை வழங்கி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நீர்ப்பாசன விவசாயி களின் உரிமையை பறிக்க முடியாது, கர்நாடக அரசு புதிய தடுப்பணை கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்றம் இறுதிதீர்ப்பு வழங்கியது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்த நிலையில் மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. காவரி நடுவர் மன்றத்தை கண்காணித்து செயல்படுத்துவதற்காகவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. சட்டவிரோத மனு இந்தநிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் நடுவர் மன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்., ) தயார் செய்தது கர்நாடக அரசு. அதை மத்திய ஜல்சக்தி துறைக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அனுப்பியது. டி.பி.ஆர்., தயாரிக்க ஜல்ஜீவன் துறை ஒப்புதல் கொடுத்து அதை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியதும், ஆணையம் அதை ஏற்றுக் கொண்டதும் தவறு. எனவே காவிரி மேலாண்மை ஆணையம், ஜல்சக்தி துறைக்கு எதிராகத் தான் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆணையம் ஏற்றுக் கொண்டதே தவறு என ஆணையத்தை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருக்க வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யாததால், 'கர்நாடக அரசு கொடுத்த டி.பி.ஆர்., மனுவை ஆணையம் விசாரிக்கலாம். தமிழக அரசின் நியாயங்களை எடுத்துரைக்கலாம்' என உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்புக்கு சவாலாக உள்ளது. இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் மவுனம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால் தான் ஆணையம் மனுவை ஏற்றுக் கொண்டது சரியா, தவறா என தெரிந்திருக்கும். அதற்கு பதிலாக கர்நாடக அரசின் மனுவை ரத்து செய்ய வேண்டுமென வழக்கு தொடர்ந்தது தவறு. இதுகுறித்த முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்க மறுக்கிறார். அதுவே நமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆணையத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. காவிரி உரிமைக்காக 50 ஆண்டு காலம் தமிழக விவசாயிகள் போராடி பெற்ற உரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Venugopal, S
நவ 16, 2025 06:28

நீங்க காலம் காலமாக இலவசத்தை வாங்கிகிட்டு ஓட்டு போடுவீர்கள். அவர்கள் கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்து தற்போது மத்திய அரசு மீட்க வேண்டும் என சட்ட சபையில் ஒப்புக்கு மக்களை திசை திருப்பும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடகம் நடத்துவர்...அதே போல தற்போது இதற்க்கு வாய் மூடி மவுனியாக இருந்து கொண்டு இதற்கும் மத்திய அரசு காரணம் என ஸ்டிக்கர் ஒட்டுவர். மத்தியில் 70 வருடமாக கான் க்ராஸ் உடன் ஊழலை மறைக்க கள்ள கூட்டணியிலும் இருந்து கொண்டு அனைத்து த‌மிழ‌ர்க‌ளி‌ன் உரிமையை விட்டுக் கொடுத்து தற்போது முதலை கண்ணீர் விட்டு நாடகம் ஆடுவார்கள். நீங்களும் வழக்கம் போல சும்மா பொறுப்பு ஏற்க வேண்டும் அப்டின்னு ஒப்புக்கு ஒரு அறிக்கை விட்டு அவர்கள் கொடுக்கும் பெட்டிகள், வாரிய தலைவர் பதவிகளை பெற்ற கொண்டு மக்களை மொட்டை அடிப்பார்கள். கள்ள கூட்டணி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை