டி.இ.டி., தேர்வில் தமிழக அரசு நிலைப்பாடு ; சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
மதுரை : 'அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., தேவையில்லை என்ற முடிவு எடுத்துள்ள நிலையில், 14 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.தமிழகத்தில் டி.இ.டி., நடைமுறைக்கு வருவதற்கு முன் கல்வித்துறை சார்ந்த வழிகாட்டுதல், நெறிமுறை அடிப்படையில், அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் 1500 பேர் நியமிக்கப்பட்டனர். அதே காலகட்டத்தில் இதே நிபந்தனைகளுடன் அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேவையில்லை என்ற நிலைப்பாட்டை தற்போது தமிழக அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கிலும் தெரிவித்துள்ளது.மேலும் 'பதவி உயர்வுக்கும் டி.இ.டி., வேண்டும்' என்ற நிபந்தனையை நீக்கும் வகையில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்காக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. டி.இ.டி., நிபந்தனையால் பாதிக்கப்பட்ட 1500 சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ஏற்கனவே நியமிக்கப்பட்ட சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள், பதவி உயர்வுகள் போன்ற நடவடிக்கைகளுக்கு அரசு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதுபோல் 14 ஆண்டுகளுக்கு முன் நியமனம் பெற்ற உதவிபெறும் சிறுபான்மைற்ற பள்ளி ஆசிரியர்கள் 1500 பேரின் பல ஆண்டுகள் கோரிக்கையையும் அரசு பரிசீலிக்க வேண்டும். பட்ஜெட்டில் அதுதொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கிறோம் என்றனர்.