உணவுக்காக அலைக்கழிப்பு ஆசிரியர்கள் முகம் சுளிப்பு
மதுரை: மதுரையில் கல்வித்துறை சார்பில் நடந்த மன்றச் செயல்பாடுகள் தொடர்பான மாவட்ட போட்டிகளில் மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதி செய்யாததால் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மன்றச் செயல்பாடுகள் குறித்து பள்ளி, ஒன்றியம் வாரியாக கட்டுரை, கவிதை, பேச்சு, கதை கூறுதல், சிறார் திரைப்படம் கதை வசனம், ஒளிப்பதிவு, நடிப்பு, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் சேதுபதி, ஓ.சி.பி.எம்., எம்.சி., பள்ளிகள், சி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் 2 நாட்களாக நடந்தன. நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் போக்குவரத்து உள்ளிட்ட செலவு தொகை இதுவரை வழங்கவில்லை. மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு, குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஆசிரியர்களை கண்டுகொள்ளவில்லை. உணவுக்காக அலைக்கழிக்கப்பட்டனர். மாவட்ட போட்டிகளுக்கு அரசு ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் முழுமையாக செலவிட்டிருந்தால் ஆசிரியர்களுக்கும் உணவு வசதி செய்திருக்கலாம் என்று புலம்பினர். கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு ஒதுக்கிய நிதி மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதற்கு மட்டுமே போதியதாக இருந்தது. சில மையங்களில் ஆசிரியர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர்.