தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு
மதுரை: மதுரையில் தொழில்நுட்ப ஜவுளியில் முதலீடு, உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் டெக்ஸ்டைல் மிஷன் 2025 கருத்தரங்கு நடந்தது. ஜவுளித்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். துணை இயக்குநர் ராகவன் பேசுகையில், 'தமிழக அரசு நாட்டின் ஜவுளித்தொழில்நுட்பப் பிரிவில் தன்னை முதன்மையான மாநிலமாக நிலைநிறுத்த தமிழ்நாடு டெக்ஸ்டைல் மிஷன் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது.இதன் மூலம் தொழில்முனைவோர்களுக்கு, தொழில் தொடங்கும் நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆலோசகர்களுக்கு வழங்கும் கட்டணத்தில் ரூ.50 லட்சம் வரை மானியம் பெற முடியும்' என்றார். போக்குவரத்து ஜவுளி தொழில்நுட்பம், பாதுகாப்பு ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உள்ள வாய்ப்புகள் பற்றி சர்வதேச தொழில்நுட்ப ஆலோசகர்கள் விளக்கினர். மாவட்ட சிறு,குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் செந்தில்குமார், ராஜபாளையம் நுாற்பாலை சங்கத் தலைவர் இளவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மண்டல ஜவுளித்துறை துணை இயக்குநர் திருவாசகர் நன்றி கூறினார்.