நெல் கொள்முதல் மையங்கள் தாமதமாகாது என்ற கலெக்டரின் வாக்குறுதி.. காற்றில் பறக்குது
மதுரை: 'இனிமேல் தாமதமின்றி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும்' என கலெக்டர் பிரவீன்குமார் உறுதியளித்த நிலையில், குறுவை நெல் சாகுபடிக்கான 40 மையங்களை இதுவரை திறக்கவில்லை. மழைக்கு பயந்து குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் நெல்லை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் ஒருபோகம், இருபோகம், குறுவை நெல் சாகுபடியின் போது விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் நெல் கொள்முதல் மையங்களை திறப்பதில்லை. 30 முதல் 40 சதவீத விவசாயிகள் நெல்லை அறுத்து குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்ற பின்பே மையத்தை திறக்கின்றனர். இப்பிரச்னையை தீர்வு காணும் வகையில் தனியாக கூட்டம் நடத்த உத்தரவிட்ட கலெக்டர் பிரவீன்குமார், உரிய நேரத்தில் மையம் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். செப்டம்பர் இறுதியில் 40 மையங்கள் திறக்கப்படும் என நுகர்பொருள் வாணிப கழக (டி.என்.சி.எஸ்.சி.,) அதிகாரிகள் தெரிவித்தும் தற்போது வரை மையங்கள் திறக்கவில்லை என்கின்றனர் விவசாயிகள். வியாபாரிகளுக்கு லாபம் குலமங்கலம், பூதகுடி விவசாயிகள் ராமசுப்ரமணி, பாலசுப்ரமணியம் கூறியதாவது: அக்., 3 ல் கலெக்டர், டி.என்.சி.எஸ்.சி. அதிகாரிக்கு கடிதம் அனுப்பினோம். மையம் திறப்பதற்கு ஆட்கள் இல்லை அதிகாரி கூறுகிறார். நெல்லை உற்பத்தி செய்வதை விட சரியான நேரத்திற்கு விற்பது தான் எங்களுக்கு பிரச்னையாக உள்ளது. மையம் திறக்கும் வரை, நெல்லை பாதுகாக்க கோடவுன் வசதியில்லை. வீட்டில் வைக்கும் அளவிற்கு இடமில்லை. மழை பெய்தால் நெல் நனைந்து வயலில் முளைத்து விடும் என பயந்து வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்கிறோம். மையத்தில் 40 கிலோ மூடைக்கு ரூ.1000 தருகின்றனர். குலமங்கலம், பூதகுடி, கட்டக்குளம், வீரபாண்டி பகுதிகளில் நிறைய விவசாயிகள் நெல்லை அறுவடை செய்துள்ளோம். வியாபாரிகளிடம் 68 கிலோ மூடையை ரூ.1200க்கு விற்றோம். ஏற்று கூலி, வண்டி வாடகையை கணக்கிட்டால் எங்களுக்கு நஷ்டம் தான். எங்களிடம் நெல்லை வாங்கிய வியாபாரிகள், மையம் திறந்த பின் கொண்டு சென்று நல்ல விலை விற்று லாபம் பார்க்கின்றனர். மொத்தத்தில் கலெக்டர் உத்தரவு காற்றில் பறக்கிறது. திட்டமிட்டு தாமதமாக மையம் திறப்பதற்கு நிரந்தர முடிவு கட்ட வேண்டும். மையம் திறந்தாலும் மூடைக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை கமிஷன் பெறுவதையும் தடை செய்ய வேண்டும் என்றனர்.