உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., இளைஞரணியில் களையெடுப்பு; கவுரவம் வழங்குவது தீவிரம் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திக்...திக்...

தி.மு.க., இளைஞரணியில் களையெடுப்பு; கவுரவம் வழங்குவது தீவிரம் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திக்...திக்...

மதுரை : சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க., இளைஞரணியில், தமிழகம் முழுவதும் செல்பாடு இல்லாத நிர்வாகிகளை துாக்கியடிப்பதும், களப் பணியாற்றும் நிர்வாகிகளுக்கு பதவிகள் வழங்குவதும் துவங்கியுள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களில் நிர்வாகிகள் 'திக்... திக்' மனநிலையில் உள்ளனர்.தி.மு.க.,வில் தொண்டர், இளைஞர், மாணவர், மகளிர், விவசாய, தொழிலாளர் என 23 அணிகள் உள்ளன. இதில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் செயல்படும் இளைஞரணிக்கு மவுசு அதிகம். இந்த அணி அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளருக்கு (மா.செ.,) இணையாக வலம் வருகின்றனர். இதனால் சில மாவட்டங்களில் மா.செ.,க்கள் இளைஞரணி அமைப்பாளர்களை 'அட்ஜெஸ்ட்' செய்து கட்சி பணியாற்றினாலும், பல மாவட்டங்களில் அமைப்பாளர்களுக்கும், மா.செ.,க்களுக்கும் பனிப்போர் நடப்பதாக கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றன.ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பில் அநீதி, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தொகுதிகள் வாரியாக கூட்டங்கள் நடத்த இளைஞரணிக்கு உத்தரவிடப்பட்டது. பல மாவட்டங்களில் போதிய திட்டமிடல் இல்லாமல் நடந்ததாக, அக்கூட்டங்களில் பங்கேற்ற சில சீனியர் தலைமை பேச்சாளர்கள் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதற்கேற்ப சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இளைஞரணி - மா.செ.,க்கள் தரப்பில் இருந்தும் பரஸ்பர புகார்களும் அளிக்கப்பட்டன.இதற்கிடையே சென்னை கிழக்கு மாவட்டம் மாணவரணி அமைப்பாளராக இருந்த 'வானவில்' விஜய்க்கு இளைஞரணி அமைப்பாளராகவும், அமைச்சர் மூர்த்திக்கு உட்பட்ட மதுரை தி.மு.க., வடக்கு மாவட்டத்தில் இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த இளங்கோவிற்கு அமைப்பாளராகவும் பதவிகள் வழங்கப்பட்டன.திருப்பூரில் இளைஞரணி அமைப்பாளராக இருந்த தங்கராஜூவிற்கு மாநகர் மாவட்ட செயலாளராகவும், விருதுநகர் இளைஞரணி அமைப்பாளராக இருந்த தனுஷ்குமாருக்கு மாநில விளையாட்டு அணி துணை அமைப்பாளராகவும் பதவிகள் வழங்கி 'கவுரவம்' செய்யப்பட்டுள்ளது.அதேநேரத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில், ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் களையெடுக்கப்பட்டு இதுவரை மாற்று பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இதுபோல் மேலும் பல மாவட்டங்களில் இளைஞரணியில் நடவடிக்கைகள் பாயும் என்பதால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.இதுகுறித்து இளைஞரணி சீனியர் நிர்வாகிகள் கூறியதாவது:தேர்தல் நேரத்தில் மாவட்டங்களில் உள்ள உட்கட்சி மோதல்கள் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இருப்பினும் இளைஞரணி என்பதால் உதயநிதி கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து நடவடிக்கைகள் பாய்ந்தன. இளைஞரணியிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் பிற அணியினர் கட்சிப் பணியில் தீவிரம் காட்டுவர் என்ற எண்ணத்தில் தான் இந்த களையெடுப்பும், கவுரவம் தரும் நடவடிக்கைகளும் நடக்கின்றன என்றனர்.

அடுத்தது மதுரையா...

மதுரை நகர் தி.மு.க.,வில் நகர் செயலாளர் தளபதிக்கும், இளைஞரணி அமைப்பு செயலாளர் சவுந்திரத்திற்கும் மறைமுக மோதல் வெடித்துள்ளது. வடக்கு சட்டசபை தொகுதியில் அண்ணாநகரில் இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு சரியாக ஏற்பாடு செய்யவில்லை என சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மதுரை மத்தி, தெற்கு தொகுதிகளில் நடந்த கூட்டங்களை சம்பந்தப்பட்ட பகுதி செயலாளர்கள் நடத்த மாவட்ட தலைமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக தளபதி - சவுந்தரம் தரப்பும் மாறி மாறி தலைமைக்கு புகார்கள் அனுப்பியுள்ளன. எனவே விரைவில் மதுரையில் நடவடிக்கை இருக்கும் என கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ