உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குண்டாஸ் கைதுக்கு 12 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யும் உரிமை மறைப்பு 4 முறை நடந்ததால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குண்டாஸ் கைதுக்கு 12 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யும் உரிமை மறைப்பு 4 முறை நடந்ததால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: குண்டர் தடுப்பு சட்ட கைது உத்தரவு யாருக்கு எதிராக பிறப்பிக்கப்படுகிறதோ அவர் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரியிடம் 12 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்பது விடுபட்டுள்ளது. இது மதுரை கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் மீண்டும், மீண்டும் நிகழ்ந்துள்ளது. இவ்விவகாரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்புடைய நபரை கண்டறிய விசாரணை மேற்கொள்ள எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சீமான். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் இந்தாண்டு பிப்.27 ல் உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாயப்பெருமாள்: உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 12 நாட்களுக்குள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்த அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யும் உரிமை பற்றி உத்தரவில் தெரிவிக்கவில்லை. மேல்முறையீடு செய்யும் உரிமை மனுதாரருக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி எந்தவொரு நபரையும் கைது செய்யும்போது, அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரி தெரிவிக்க வேண்டும். உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான துவக்க கட்ட வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும். சட்டப்படியான இக்கருத்தை புறக்கணித்துவிட்டு, தடுப்புக் காவல் அதிகாரி பிறப்பித்த உத்தரவு பற்றி நாங்கள் கவலை கொள்கிறோம். தடுப்புக் காவல் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்ய தனக்கு உரிமை உள்ளது என்பதை காவலில் உள்ளவருக்குத் தெரிவிக்கத் தவறி மதுரை கலெக்டர் உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் தாக்கலான 4வது வழக்கு இது என்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதே தவறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஊழியர்களில் யாரேனும் ஒருவரால் இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா, கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் அதை தயாரித்தவர் அல்லது தட்டச்சு செய்தவர் யார், மேல்முறையீடு செய்யும் உரிமை வேண்டுமென்றே விடுபட்டதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். தடுப்புக் காவல் உத்தரவானது விசாரணையின்றி ஒருவரின் சுதந்திரத்தை பறிப்பதால், அதில் கையொப்பமிடுவதற்கு முன் கலெக்டர் விழிப்புடன் இருந்திருக்க வேண்டும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இக்குறிப்பிடத்தக்க விடுபடல் எவ்வாறு 4 முறை நிகழ்ந்தது, முழு பிரச்னையிலும் தொடர்புடைய உண்மையான நபரை கண்டறிய விசாரணை மேற்கொள்ள எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், கலெக்டர் அக்.,22 ல் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கில் சீமானுக்கு எதிராக கலெக்டர் பிறப்பித்த கைது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை