சர்ச்சை கருத்துக்கு நீதிபதி வருத்தம்
பெங்களூரு : உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷாநந்தா வருத்தம் தெரிவித்தார்.கர்நாடகாவின் பெங்களூருவில் நில உரிமையாளருக்கும், குத்தகைகாரருக்கும் இடையிலான வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஸ்ரீஷாநந்தா விசாரித்தார். விசாரணையின் போது, பெங்களூருவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று அவர் குறிப்பிட்டார். நீதிபதி தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.இதையடுத்து இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தை இரு தினங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா உயர் நீதிமன்றம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் அனைவர் முன், தான் தெரிவித்த கருத்துக்கு நீதிபதி ஸ்ரீஷாநந்தா வருத்தம் தெரிவித்தார். மேலும் எந்தவொரு தனிநபரையோ அல்லது சமூகத்தின் பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கில் தான் கருத்து கூறவில்லை என தெரிவித்தார்.