மதுரை மாநகராட்சி பதவி மாற்றமில்லை என்பதால் மேயர் தரப்பு சுறுசுறு ; விசுவாச அதிகாரிகள், கவுன்சிலர்கள் வட்டம் உற்சாகம்
மதுரை: மதுரை மாநகராட்சியில் மேயர் பதவியில் மாற்றமில்லை என்ற ஆளுங்கட்சி தலைமையின் முடிவால், தற்போதைக்கு மேயர் இந்திராணி தரப்பு மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. நகர் தி.மு.க.,வின் ஆசியும் அவருக்கு உள்ளதால் மேயர் 'விசுவாச' அதிகாரிகள், கவுன்சிலர்கள் குஷியாகியுள்ளனர். மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மண்டல, நிலைக் குழுத் தலைவர்கள் பதவியிழந்தனர். மதுரை மாநகராட்சி மீது தி.மு.க., தலைமையின் கோபத்தால் மேயர் இந்திராணி மாற்றப்படுவார் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகர் செயலாளர் தளபதி தரப்பில் ஆளுக்கு ஒருவர் புதிய மேயர் பதவிக்கு சிபாரி செய்யப்பட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் மேயர் பதவி பறிபோய் விடுமோ என்ற நிலையில் மேயர் இந்திராணியின் ஆய்வுப் பணி தொய்வடைந்தது. அமைச்சர்கள், அரசு விழாவில் பங்கேற்றாலும், மேயருக்கு முன்பு போல் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கட்சி, நிர்வாகிகள் தனித்து விட்ட நிலையிலும் இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்திக் காட்டினார். இந்நிலையில், கைதான கணவர் பொன்வசந்த் ஜாமினில் வந்துள்ளார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் நகர் தி.மு.க.,வில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளை சந்தித்துள்ளார். இந்நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், மேயர் மாற்றம் தேவையில்லை எனவும், மண்டல தலைவர்கள் தேர்தலை நடத்தவும் தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் மேயர் தரப்பு கவுன்சிலர்கள், அதிகாரிகள் உற்சாகமடைந்துள்ளனர். அதே நேரம் ஒரு தரப்பு அதிகாரிகள், அலுவலர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மேயர் இந்திராணி, அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளர். ஆரம்ப காலத்தில் நிர்வாக ரீதியாக மேயரின் கணவர் பொன்வசந்த் தலையீடு இருந்ததால் கமிஷனருக்கும், மேயருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. இதனால் சிம்ரன் ஜித் சிங் காலோன், பிரவீன்குமார், மதுபாலன் உள்ளிட்ட கமிஷனர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். கமிஷனர் - மேயருக்கு இடையே அதிகாரிகளும் பலிகடா ஆக்கப்பட்டனர். தினேஷ்குமார் கமிஷனராக பொறுப்பேற்ற பின் இந்நிலை சீரானது. அதன்பின் சித்ரா பதவியேற்ற பின் சொத்துவரி முறைகேடு வழக்கு வேகமெடுத்தது. இதன் தொடர்ச்சியாக மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். மாநகராட்சி நிர்வாகத்தின் முழுக் கட்டுப்பாடும் கமிஷனரிடம் சென்றது. தற்போது பொன்வசந்த் ஜாமினில் வந்துள்ளார். மேயர் பதவியிலும் மாற்றமில்லை என தலைமை முடிவு செய்துள்ளது. கட்சியில் இருந்து பொன்வசந்த் நீக்கப்பட்டிருந்தாலும் உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் ஆதரவு அவருக்கு உள்ளது. இதனால் மீண்டும் மேயரின் 'விசுவாச' அதிகாரிகள், கவுன்சிலர்கள் வட்டம் தங்கள் பலத்தை வெளிக் காட்டும் முயற்சியில் ஈடுபடும். சொல்லப்போனால் தற்போது மேயர் தரப்பு சுறுசுறுப்படைந்துள்ளது என்றனர்.