உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீரா துயரின் நடுவே துரைசாமி நகர் மக்கள்

தீரா துயரின் நடுவே துரைசாமி நகர் மக்கள்

மதுரை: மதுரை துரைசாமி நகர் 70வது வார்டில் 1,2,3 தெருக்கள், அஸ்வின் குறுக்குத்தெரு, சந்தியா தெரு, வேல்முருகன் தெரு, ஷாலின் தெரு, ஸ்வரூப் 1 முதல் 7 தெருக்களில் 2500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஏராளமான தீர்வு காணாத பிரச்னைகளின் நடுவே வசிப்பதாக இப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கோவிந்தன், செயலாளர் கோவிந்த ராஜன், பொருளார் வருசை முகமது, துணைச் செயலாளர் பாலசுப்ரமணி, செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமி, மீனாட்சி சுந்தரம், சின்னசாமி, சேதுராமன், உறுப்பினர்கள் பழனிசாமி, மனோஜ் கூறியதாவது:

வாய்க்கால் முழுமை பெறுமா

இங்கு 2012 ல் நிறுத்தப்பட்ட மாடக்குளம் நடுமடை வாய்க்கால் பைப்லைன் திட்டம் இன்று வரை முழுமை பெறாமல் உள்ளது. வாய்க்காலில் கழிவுநீர் கலந்து நீர் மாசுபடுகிறது. இந்தக் கழிவுநீர் தெருக்களில் ஓடியதால் அந்த பைப் லைன் இணைப்பை நிறுத்தி விட்டோம். திட்டத்தை நிறுத்தியதால் காலி மனைகளில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அதில் இருக்கும் பாம்புகள் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்துகின்றன. கொசுத் தொல்லையும் அதிகம் உள்ளது. இது குறித்து பேசியும் தீர்வு கிடைக்கவில்லை. மழைநீர் வடிகால் திட்டத்தை முழுமைப் படுத்த வேண்டும்.

மாடுகளால் அச்சம்

எங்கள் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம் பாதியில் நிற்கிறது. இத்திட்டத்தில் 13 தொட்டிகளில் 5 மட்டுமே அமைத்துள்ளனர். இது குறித்து கேட்டும் பலனில்லை. விரைவில் அமைத்தால் நிறைய பிரச்னைகள் தீரும். வீட்டுக் குப்பையை அகற்ற சங்கத்தில் ஆட்களை நியமித்துள்ளோம். ஆனால் தெரு குப்பையை அப்புறப்படுத்துவதில்லை. இதனால் எப்போதும் சுத்தமின்றி காணப்படுகிறது. சுற்றுச் சூழல் மாசுபடும் அபாயம் உள்ளது. காலையில் மாடுகள் தெருவில் வலம் வருகின்றன. தெருவில் செல்வோர் மீது பாய வருவதால் நடக்கவே அச்சமாக உள்ளது.

பள்ளம், மேடான ரோடுகள்

மெயின் தெருக்களிலும், நுழைவு வாயிலிலும் ரோடுகள் பள்ளம், மேடாக உள்ளன. விவேக் தெரு உட்பட பல தெருக்களில் ரோடு சீரற்று இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். அம்ரூத் திட்டத்தில் குழாய்கள் அமைத்து ஓராண்டாகிறது. ஆனாலும் திட்டத்திற்காக தோண்டிய ரோடுகள் சீரற்று இருக்கிறது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய ரேஷன் கடையை விரைவில் திறந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை