கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு பாதாள சாக்கடையே ஜெ.ஜெ., நகர் மக்களின் எதிர்பார்ப்பு
மதுரை, : மாநகராட்சி 100வது வார்டில் அவனியாபுரம் ஜெ.ஜெ., நகர் பகுதி பிரதானமாக உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கென ரேஷன் கடை இல்லாததால் பிற வார்டுகளை சார்ந்து இருக்கின்றனர். பாதாள சாக்கடை, ரோடு வசதி இல்லாததால் தினந்தோறும் பிரச்னைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதி மேம்பாட்டுக்காக இயங்கும் குடியிருப்போர் சங்கத் தலைவர் காளிதாசன், துணைத்தலைவர்கள் சந்துரு, பாண்டியராஜன், செயலாளர் நாகராஜன், செல்லபாண்டி கூறியதாவது: இந்த நகரில் பல ஆண்டுகளாக ரோடு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். கவுன்சிலரிடம் கேட்டதற்கு,'நிதி ஒதுக்கவில்லை' என்கிறார். பிரதான வீதியில் உள்ள தார் ரோடும் பழுதடைந்து விட்டது. இந்த ரோட்டை 4 சக்கர வாகனங்கள் கடக்க சிரமப்படுகின்றன. இருபதுக்கும் மேற்பட்ட குறுக்குத்தெருக்களில் ரோடுவசதி இல்லை. இருக்கும் ரோடும் மேடு, பள்ளமாய் உள்ளன. மழை நேரங்களில் பாம்பு, பூரான் என அழையா விருந்தாளிகள் வீடுகளுக்குள் வருகின்றன. ஜெ.ஜெ., நகருக்குள் நுழையும் பகுதியில் மதுக்கடை உள்ளது. இங்கு வரும் மதுப்பிரியர்கள் சாலைவிதிமீறுவதால், அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். திறந்தவெளி சாக்கடையால் கழிவுநீர் குடியிருப்புப் பகுதியில் தேங்கி சுகாதாரக்கேடு உண்டாகிறது. பாதாள சாக்கடை திட்டம் வந்தால்தான் விடிவு கிடைக்கும். பிரதான வீதி வரையே குப்பை வண்டி வருகிறது. இதனால் பிற தெரு மக்கள் பாதிக்கின்றனர். காட்சிப் பொருளான கம்பங்கள் காலை நேரம் பெரும்பாலான பஸ்கள் நிற்காமல் செல்வதால் மாணவிகள் பாதிக்கின்றனர். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். நிழற்குடை இல்லாததால் பயணிகளுக்கு வெயில், மழையில் பாதுகாப்பில்லை. தெருக்களுக்கும் பெயர்ப்பலகை இல்லாதது குறையே. இங்கு 80க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் இருந்தும் 15 தெருவிளக்குகளே உள்ளன. இதிலும் எரிவது சில விளக்குகளே. இதனால் பெரும்பாலானோர் இரவில் வெளியே வருவதில்லை. அடிக்கடி குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதனங்கள் பழுதாகின்றன. மின்வாரியத்தினர் நடவடிக்கை அவசியம் தேவை. இருநுாறுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிவதால், பள்ளிச் சிறுவர்கள், பெண்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். நாய்கள் ஆடு, மாடுகளை கடித்துக் குதறுகின்றன. தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி குடிநீர் கழிவுடன் வருவதால் முகம் சுளிக்க வைக்கிறது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.