உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் உட்பட உயர் பதவிகள் தேர்வு நடைமுறையில் இழுபறி

மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் உட்பட உயர் பதவிகள் தேர்வு நடைமுறையில் இழுபறி

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் உட்பட 5 உயர் பதவிக்கான தேர்வு நடைமுறையில் இழுபறி நீடிக்கிறது. நான்கு மாதங்களாக சிண்டிகேட் கூட்டம் நடக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் 10 மாதங்களாக காலியாக உள்ளது. பதிவாளர், டீன், தேர்வாணையர், தொலைநிலைக் கல்வி இயக்குநர், கூடுதல் தேர்வாணையர் ஆகிய 5 உயர் பதவிகள் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளன. இப்பதவிகளில் பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். பல்கலை துணைவேந்தராக கிருஷ்ணன் இருந்தபோது பதிவாளர் உட்பட 5 உயர் பதவிகளையும் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு நேர்காணல் நடத்திய தேர்வுக் குழு (செலக் ஷன் கமிட்டி) இப்பதவிக்கு 'யாரும் பொருத்தம் இல்லை' என முடிவு செய்து யாரையும் தேர்வு செய்யவில்லை. இரண்டாவது அறிவிப்பும் இழுபறி இதையடுத்து இப்பதவிகளுக்கான அறிவிப்பை மீண்டும் 2024 டிசம்பரில் பல்கலை வெளியிட்டது. 5 பதவிகளுக்கும் 120 பேர் வரை விண்ணப்பித்தனர். இவற்றின் மீதான பரிசீலனை நடந்து தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கும் பணி முடிந்தது. இதன் பின் 'தேர்வுக்குழு' அமைத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்த வேண்டும். ஆனால் தேர்வுக் குழு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தற்போது துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலையை வழிநடத்த கல்லுாரிக் கல்வி கமிஷனர் சுந்தரவள்ளியை கன்வீனராக அரசு நியமித்துள்ளது. இவர் திருச்சி பாரதியார், சேலம் பெரியார் என மூன்று பல்கலைகளுக்கும் கன்வீனராக உள்ளார். இதனால் பணிப்பளு காரணமாக அவர் முடிவுகள் எடுப்பதில் தாமதமாகிறது என சர்ச்சை எழுந்துள்ளது. கவனிப்பாரா உயர்கல்வி செயலர் பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது: விண்ணப்பம் மீதான பரிசீலனை முடிந்து நேர்காணலுக்கான தகுதியானவர் பட்டியல் ரெடியாகி மூன்று மாதங்களாகின்றன. நேர்காணல் நடத்த தேர்வுக்குழு அமைக்க வேண்டும். இதற்கு சிண்டிகேட் கூட்டம் நடத்தி தேர்வுக் குழுவை முடிவு செய்து, கவர்னர் பிரதிநிதியை குழுவில் சேர்க்க கவர்னருக்கு கடிதம் எழுத வேண்டும். இதன் பின் தான் நேர்காணல் நடத்த முடியும். ஆனால் 4 மாதங்களாக சிண்டிகேட் கூட்டமே நடத்தவில்லை. கன்வீனருக்கும் இதுகுறித்து கவலை இல்லை. உயர் பதவிகளில் 'கூடுதல் பொறுப்பு' வகிக்கும் பேராசிரியர்களுக்கும் ரெகுலர் பதவிகளை நிரப்பும் ஆர்வம் இல்லை. உயர்கல்வி செயலர் சங்கர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ