மேலும் செய்திகள்
வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
27-Nov-2024
மதுரை : மதுரையில் வி.சி.க., கட்சி கொடிக்கம்ப பிரச்னையில் வருவாய்த்துறை ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பாக ஒருங்கிணைந்து போராடி வெற்றி பெற்றதையடுத்து இதேரீதியில் போராடினால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு ஏற்படலாம் என்ற எண்ணம் இத்துறையின் ஊழியர், அலுவலர் சங்கங்களிடம் ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் வெளிச்சந்தத்தில் சமீபத்தில் வி.சி.க., கொடிக்கம்ப பிரச்னை உருவானது. அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் நடுவதாகக்கூறி போலீஸ், வருவாய்த்துறையினர் தடுத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் 3 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ஒரு மண்டல துணை தாசில்தாருக்கு 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.இந்த நடவடிக்கை வருவாய்த்துறையினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்துறையில் 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் கூட்டமைப்பாக போராட்டத்தில் இறங்கின. மாவட்ட அளவில் 2 ஆயிரம் வருவாய் ஊழியர்களில் 97 சதவீதம் பேர் பங்கேற்றதால் 11 தாலுகாக்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. வருவாய்த்துறை அலுவலர்கள் பணிபுரியும் பேரிடர் மேலாண்மை, தேர்தல் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலம், பொது வினியோகம், மாவட்ட பதிவு வைப்பறை உள்பட பல்வேறு துறைகளிலும் பணிகள் முடங்கின. ஒருங்கிணைய எதிர்பார்ப்பு
அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இறங்கி 'சஸ்பெண்ட் ' உத்தரவை ரத்து செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நடவடிக்கை வருவாய்த்துறை ஊழியர்களிடம் புது கருத்தாக்கத்தை உருவாக்கியுள்ளது.மாவட்ட அளவில் வரலாற்றில் முதன்முறையாக வருவாய்த்துறையின் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இப்போதுதான் போராடியுள்ளன. இதனால்தான் இதனை சாதிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்துள்ளது. இதேபோல எல்லா சங்கங்களும் இணைந்து போராடினால் என்ன என்ற எண்ணம் உருவாகியுள்ளது. தங்களின் துறைரீதியானவை தவிர பொதுவான கோரிக்கையாக உள்ள புதிய பென்ஷன் திட்டம் ரத்து போன்றவற்றில் ஒருங்கிணைந்து போராடினால் சாதிக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது.அரசு துறைகளில் முக்கியமானவை வருவாய், ஊரக வளர்ச்சித் துறைகள்தான். ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுவதோடு, இத்துறைகள் மக்களுடன் நேரடியாக அதிக தொடர்புள்ளவை. கிராமங்களில் அடிப்படை பணிகளை கவனிக்கும் ஊரக வளர்ச்சித்துறையிலும் ஏராளமான ஊழியர்கள், அலுவலர் சங்கங்கள் என பிரிந்து கிடக்கின்றன. இந்த இருதுறைகளின் சங்கங்களும் இணைந்து போராடினாலே நிர்வாகம் முடங்கும். எனவே இந்த இருதுறைகளின் அரசியல் சார்பற்ற ஊழியர்கள், அலுவலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
27-Nov-2024