சோழவந்தானுக்கு வந்த சோதனை
சோழவந்தான் : சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்யப்படாததால் அதை அகற்றும் பணி தாமதமாகிறது.ஜெனகை மாரியம்மன் கோயில் பகுதி, ஸ்டேட் வங்கி, வட்டபிள்ளையார் கோயில், மார்க்கெட் ரோடு பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளாலும், சில கடை உரிமையாளர்கள் சில அடி வரை ரோட்டை ஆக்கிரமித்துள்ளதாலும் தினமும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதுதொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதன்காரணமாக வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து பெயரளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 'முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என அறிவித்திருந்தனர்.மே 2,3ல் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள பேரூராட்சி அவகாசம் கொடுத்த நிலையில், நேற்று வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. பேரூராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ''வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடுகள் செய்யாமல் உள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தாமதமாகிறது'' என்றனர்.