நெற்பயிரில் குலைநோய் பாதிப்பா பாதுகாக்க வழிமுறைகள் இருக்கு
திருப்பரங்குன்றம், : ''குலை நோயிலிருந்து நெல் பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள்'' குறித்து திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் யோசனை தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் தற்போது சம்பா பருவ நெல் நடவு செய்து பூக்கும் பருவம் வரை பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பயிர் உள்ளது. நெல் பயிரை பொறுத்தவரை இரவு நேரங்களில் காற்றில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் குலை நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.குலை நோய் பாதித்த பயிர்களின் இலைகளின் மேல் சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டும் இருக்கும். பாதுகாக்கும் வழிமுறைகள்
குலை நோயில் இருந்து நெற்பயிரை காக்க அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்த்து, அதை மூன்று தவணையாக பிரித்து இடவேண்டும். வரப்பில் இருக்கும் களைகளை முழுமையாக அழிக்க வேண்டும்.விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். அல்லது கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/ டிரைசைக்ளசோல் ஆகிய ஏதாவது ஒரு மருந்து ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கொண்டு நாற்றுக்களின் வேர்களை 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பொடியை 0.5 சதவீதம் என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும். அல்லது எக்டேருக்கு 500 மி.லி. எடிபென்பாஸ், அல்லது 500 மி.லி. அசாக்ஸிஸ்ட்ரோபின், அல்லது 500 கிராம் டிரைசைக்ளோசோல் இவற்றில் ஏதாவது ஒன்றை தெளிக்கலாம் என்றார்.