மதுரை : தெற்கு ரயில்வேயில் மதுரைக் கோட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை இதுவரை ரயில்வே தேர்வு வாரியம் சென்னை (ஆர்.ஆர்.பி.,) மூலம் நிரப்பப்பட்ட நிலையில் முதல் முறையாக திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி.,க்கு மாற்றப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் கோட்டங்கள்,கேரளாவின் திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்கள் உள்ளன. இதுவரை ரயில்வே காலிப்பணியிடங்களை சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட கோட்டங்களுக்கு சென்னை ஆர்.ஆர்.பி., மூலமும், திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் ஏற்படும் காலியிடங்களை திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி.,யும் நிரப்புவது வழக்கம்.தற்போது தெற்கு ரயில்வேயில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு மதுரை கோட்டத்தில் காலியாக உள்ள 750 பணியிடங்கள் திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி., மூலம் நிரப்பப்படும் என ரயில்வே அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: ரயில்வேயில் ஏற்படும் பணியிடங்களை நிரப்புவதில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் தான் இதுவரை தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் ஏற்கனவே வெளி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் அதிகம் பேர் பணியில் உள்ளனர். அவசர காலத்தில் மொழிப் பிரச்னை பெரும் சவாலாக உள்ளது. தமிழக உரிமையை பாதிக்கும் வகையில் மதுரைக் கோட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி.,க்கு தாரைவார்த்திருப்பது தமிழர்களின் எதிர்காலம் குறிப்பாக மதுரை கோட்ட காலிப்பணியிடங்களில் நம்மவர்கள் சேருவது கேள்விக்குறியாகியுள்ளது என்றனர்.
ரயில்வே அமைச்சருக்கு வைகோ கடிதம்
இப்பிரச்னை குறித்து ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மதுரை கோட்டத்தில் உள்ள 750 காலிப் பணியிடங்களை திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி., மூலம் நிரப்பப்படும் நடவடிக்கை தமிழர்களை வேதனையடைய செய்துள்ளது.சென்னை ஆர்.ஆர்.பி., தேர்வு நடத்தினால் தான் தமிழக இளைஞர்கள் மகளிர் முழு பயனையும் அடைய முடியும். இந்த முறையால் ஒவ்வொரு மாநிலங்களில் தேர்வு வாரியம் அமைக்கப்பட்ட நோக்கம் கெட்டு விடும். மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை இதன் மூலம் பறிபோய்விடும். எனவே இதனை கவனத்தில் கொண்டு சென்னை ஆர்.ஆர்.பி., மூலம் மதுரை கோட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வெங்கடேசன் எம்.பி.,
ரயில்வே ஊழியர்கள் கூறுகையில் தமிழர்களை பாதிக்கும் விவகாரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ., மதுரை எம்.பி., வெங்கடேசன் குரல் கொடுப்பார். சென்னையில் பாண்டியன் ரயில் ஒரு மணி நேரம் பிளாட்பாரம் மாற்றப்பட்டதற்கு பொங்கியெழுந்தார். ஆனால் அவரது தொகுதிக்கு உட்பட்ட மதுரைக் கோட்டத்தில் 750 பணியிடங்களை கேரளாவிற்கு தாரைவார்க்கும் வகையிலான ரயில்வே அறிவிப்பிற்கு இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்தால் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்ற எண்ணமா. தமிழர்கள் உரிமையை பாதிக்கும் விஷயத்தில் எம்.பி., அரசியல் செய்யலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.