உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழைக்காக காத்திருக்கும் நெல் நாற்றுகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் கவலை

மழைக்காக காத்திருக்கும் நெல் நாற்றுகள் திருப்பரங்குன்றம் விவசாயிகள் கவலை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் இயந்திரம் மூலம் நடவு செய்வதற்கு, ஏராளமான விவசாயிகள் நெல் நாற்றுகளுடன், மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.தென்பழஞ்சி விவசாயிகள் சிவராமன், வேல்முருகன் கூறியதாவது: இந்தாண்டு பருவமழை போதியளவில் பெய்யுமா என்ற சந்தேகத்தில் இருந்தோம். இயந்திர நடவு செய்யலாம் என கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் 20 நாட்களுக்கு முன்பு நாற்று பாவியுள்ளனர். தற்போது நாற்றுகள் நடவுக்கு தயாராகி விட்டன. ஆனால் இன்னும் மழை சரிவர பெய்யவில்லை.கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ளவர்கள் மட்டும் ஒரு பகுதியில் மட்டும் நெல்நடவு செய்துள்ளனர். மீதமுள்ள நாற்றுகள் காத்திருக்கின்றன. தண்ணீர் குறைவாக உள்ள விவசாயிகள் நடவு செய்யாமல் உள்ளனர். நாற்றுப் பாவிய 25 நாட்களுக்குள் நடவு செய்யாவிடில் அவை முற்றிவிடும். அவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகத்தான் பயன்படுத்த முடியும். மதுரை, திருப்பரங்குன்றம் வரை நல்ல மழை பெய்கிறது. ஆனால் தென்பழஞ்சி பகுதிகளில் வெறும் துாறல்தான் பெய்தது. இன்னும் பத்து நாட்களுக்குள் மழை துவங்கினால்தான் நடவுப் பணிகளை துவக்கலாம். நடவு செய்தபின்பு மழை பெய்யாவிடில் நட்ட நாற்றுகள் வீணாகும். மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.இக்கண்மாய் தண்ணீரை நம்பி 200 ஏக்கர் நிலம் உள்ளது. 2020க்கு பின்பு கண்மாய் நிரம்பவில்லை. கண்மாயை நம்பிய விவசாயிகள் நிலங்களை தரிசாக போட்டுள்ளனர். விவசாயம் மட்டுமே தெரிந்தவர்கள் ஆடு, மாடுகள் வளர்த்து வருமானம் பெறுகின்றனர். மற்றவர்கள் கூலி வேலை, கட்டடப் பணிகளுக்காக செல்கின்றனர். தென்பழஞ்சி கண்மாய், மானவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ