உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொகுதிப் பணிகளை விரைவுபடுத்த கலெக்டரிடம் உதயகுமார் மனு

தொகுதிப் பணிகளை விரைவுபடுத்த கலெக்டரிடம் உதயகுமார் மனு

மதுரை: மதுரை மாவட்டத்தில் கிடப்பில் உள்ள வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தார். அவருடன் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் உட்பட பலர் சென்றனர்.உதயகுமார் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்த மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். திருமங்கலம், சோழவந்தானில் சட்டவிரோத கல்குவாரிகளால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும். திருமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்டை சீரமைக்கும் பணியை விரைவுபடுத்தி, தற்காலிக பஸ்ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.குராயூர் பகுதியில் முத்துராமலிங்கதேவர், மருதுபாண்டியர் மணிமண்டபம், திருவுருவச் சிலை அமைக்க அனுமதி வேண்டும். கள்ளிக்குடி ஒன்றியம் பேய்க்குளத்தில் உள்ள ஒரு ஆலையால் புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளதால் மூட வேண்டும். கப்பலுார் தொழிற்பேட்டையில் குறைந்த மின்அழுத்தம் உள்ளதால் பலர் தொழில்துவங்க முன்வரவில்லை. அங்கு 33 கிலோவாட் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். சுற்றுவட்டார பகுதியில் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை மாற்ற வேண்டும்.உரப்பனுார் கண்மாயில் பழுதடைந்த ஷட்டர்களை மாற்றி அமைக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தால் ஆளுங்கட்சியினர் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அலைபேசி எண்ணை பெற்று, தேர்தல் நேரம் பணம் வழங்க உள்ளனர். தேர்தல் ஆணையம் இதனை கவனிக்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதமே நிறைவேற்றியுள்ளார். 80 சதவீதம் பேர் தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளனர். மக்களை பிரைன் வாஷ், ஐ வாஷ் செய்யும் ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் 'வாஷ் அவுட்' கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ