உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிற்சி மைய பாதுகாப்பு விவகாரத்தில் ஒரே மாதிரியான நடைமுறை அவசியம்

பயிற்சி மைய பாதுகாப்பு விவகாரத்தில் ஒரே மாதிரியான நடைமுறை அவசியம்

புதுடில்லி: 'பயிற்சி மையங்களில் மாணவர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. டில்லியில் கடந்த ஜூலையில், ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய தரை தளத்தில் மழை வெள்ளம் புகுந்ததில், அங்கு பயிற்சி பெற்று வந்த மூன்று மாணவர்கள் பலியாகினர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பயிற்சி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தேவ், பல்வேறு ஆலோசனைகளை பரிந்துரைத்தார். தீ விபத்தின் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, கட்டண கட்டுப்பாடு, மாணவர் - ஆசிரியர் விகிதம், கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல், மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்தல், மனநலப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை வழங்குதல் என பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை அவர் பட்டியலிட்டார். இந்த விவகாரத்தில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும் என நீதிபதிகளிடம் தேவ் வலியுறுத்தினார். அவரின் பரிந்துரைகளை ஏற்ற நீதிபதிகள், 'அனைத்து பயிற்சி மையங்களில், மாணவர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் அனைத்தும் நிரந்தரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினர். வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு பின் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். கடந்த செப்.,ல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்க விரும்பும் நடவடிக்கைகள் குறித்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி