பராமரிக்கப்படாத பசுமை குடில் திட்டம்: அரசு நிதி வீண்
அலங்காநல்லுார்: போதிய திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திறன் பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர், வயலுார், தோடநேரி ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட தேசிய ரூர்பன் திட்ட நிழல் பந்தல் குடில் திட்டத்தில் ரூ.பல லட்சம் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மதுரை மேற்கு ஒன்றிய தோட்டக்கலை துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு முன் கிராம வளர்ச்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் நகர்ப்புறத்தை ஒட்டிய இக்கிராமங்களில் ரூர்பன் திட்டத்தில் பசுமை குடில் அமைத்து காய்கறி, கீரை வகைகளை கிராமப் பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்ய திட்டமிட்டனர். இதற்காக குறிப்பிட்ட அளவில் இடங்களை தேர்வு செய்து பச்சை நிற பந்தல் குடில் அமைத்தனர். போர்வெல்,சின்டெக்ஸ் அமைக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு அம்சங்கள், பராமரிப்பின்றி பல லட்சம் நிதி வீணானது. தோடநேரி காங்., நிர்வாகி மாயாண்டி: குடில் அமைத்த 3 மாதங்களில் செடிகள் நன்கு வளர்ந்து இருந்தது. ஆனால் பாதுகாப்பு வேலி இன்றி கால்நடைகளுக்கு இரையானது. ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகள் திட்டத்தை கண்டு கொள்ளவில்லை. பா.ஜ., நிர்வாகி முத்துப்பாண்டி: வயலுாரில் குடில் அமைத்த குழாய்கள் திருடு போனது. நடவு செய்யப்பட்ட 100 மரக்கன்றுகளில் ஒன்று கூட முளைக்க வில்லை. மூன்று ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மற்றும் மத்திய அரசின் வாழ்வாதார திட்டம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றார்.