பயன்படாத சுகாதார வளாகம் ரூ.2 லட்சம் செலவில் பளீச்
அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி அய்யணகவுண்டன்பட்டியில் பயன்படாத சுகாதார வளாகத்தை ரூ.2 லட்சத்தில் வெள்ளை அடித்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த அன்னகாமு, பாக்கியம், லட்சுமி செல்வராணி கூறியதாவது: குடியிருப்புகளில் சேகரிக்கும் குப்பையை கழிவுநீர் கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால் தேங்கும் கழிவுநீரால் வீட்டில் வசிப்போர் பாதிக்கும் நிலை உள்ளது. மழை நேரங்களில் விஷப்பூச்சிகள் சாதாரணமாக வீட்டுக்குள் வருகின்றன. கொசு உற்பத்தி இருப்பதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. இங்குள்ள துவக்க பள்ளி, அங்கன்வாடி அருகே மந்தை குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளன. குளம் புதைகுழியாக மாறி உள்ளதால் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இக்குளத்தை துார்வாரி கரை அமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. தண்ணீரை கொண்டு வந்து பயன்படுத்தும் நிலை உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் கட்டிய சுகாதார வளாகம் முதல் முறை செப்டிக் டேங்க் நிரம்பியதும் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. ஓராண்டுக்கு முன் ரூ.2 லட்சத்தில் வளாகத்திற்கு வெள்ளை மட்டும் அடித்துள்ளனர். உள்ளே மோட்டார் இல்லை, கழிப்பறை பராமரிக்கவில்லை. இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், இப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுகிறது என தெரிவித்தனர்.