கட்சிகளால் கதறும் உத்தங்குடி அரசு பள்ளி
ஒத்தக்கடை: உத்தங்குடியில் அரசு நடுநிலைப் பள்ளி சுவரில் போஸ்டர்களை ஒட்டி பாழ்படுத்துவோர் மீது கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. அது அரசியல் வாதிகளின் கண்களை உறுத்தியதால் தினமும் அலங்கோலம் அரங்கேறுகிறது. இச்சுவரில் அரசு சார்பில் விழிப்புணர்வு படங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் சில மாதங்களாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை சிலர் ஒட்டத் துவங்கினர். தொடர்ந்து கோயில் திருவிழா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அரசியல்வாதிகளின் கண்ணில் பட்டதால் பெரிய, பெரிய போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.விளம்பரம் செய்ய ஏதுவாக இருப்பதால் கண்ட கண்ட போஸ்டர்களை ஒட்டி பள்ளியை அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் சுவரின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, அதன் உறுதித்தன்மை பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதனை தடுக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.