கள்ளழகர் கோயிலில் தயாராகும் வாகனங்கள்
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் எழுந்தருளும் தங்கக் குதிரை வாகனத்தை தயார் செய்யும் பணி தொடங்கியது. மே 8 முதல் மே 17 வரை கள்ளழகர் திருவிழா நடைபெற உள்ளது. விழா தொடக்கமாக ஏப்.27 தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் முகூர்த்தகால் நடப்பட்டு, தலையலங்காரம் நடந்தது. கள்ளழகர் எதிர்சேவை செய்யும் ரோடுகள், எழுந்தருளும் மண்டகப் படிகள், வைகை ஆற்றில்கள்ளழகர் இறங்கும் இடத்தில் தண்ணீர் செல்வதற்கு இடையூறு ஏற்படாதவாறு ஆகாயத்தாமரைகள் அகற்றுவது போன்ற பல பணிகள் நடக்கிறது. திருவிழாவின் முக்கியநிகழ்வாக மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். மே 13ல் வீரராகவப்பெருமாள் கோயிலில் சேஷ வாகனத்தில் புறப்படுவார். அன்றைய தினம் கருட வாகனத்தில் மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடைபெறும்.இந்நிகழ்வுக்கான மூன்று வாகனங்களும் கள்ளழகர் கோயில் அறைகளில் உள்ளன. சித்திரை திருவிழாவையொட்டி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருள்வார். இதையடுத்து திருவிழாவிற்காக வாகனங்களுக்கு பிரத்யேக பூஜைகள் நடத்தி, அலங்காரம் செய்யும் பணி துவங்கியது.