உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விஜய்க்கு கூடும் கூட்டத்தால் கவலைப்படத் தேவையில்லை அமைச்சர் மூர்த்தி பேட்டி

விஜய்க்கு கூடும் கூட்டத்தால் கவலைப்படத் தேவையில்லை அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை : த.வெ.க., தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்து இப்போது பதில் சொல்லப் போவதில்லை; தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: நடிகர் விஜய் பிரசார பயணத்தில் அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூடுகிறது என்கிறீர்கள். அதற்கு நடிகர் ரஜினியே பதில் சொல்லிவிட்டார். நாங்கள் சொல்ல வேண்டும் என்பது இல்லை. 2011ல் தி.மு.க., பிரசாரத்திற்கு மதுரை வந்த நடிகர் வடிவேலுவிற்கு கூடாத கூட்டமா. பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வந்த போது கூடிய கூட்டத்தையும் பார்த்தோம். அதனால் கூட்டம் கூடுவது பற்றி கவலை இல்லை. அந்தக் கூட்டத்தால் தி.மு.க., ஓட்டு வங்கி பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் நேரத்தில் முதல்வர் அதை பார்த்துக்கொள்வார். மதுரை மேற்குத் தொகுதியில் தி.மு.க., ஆட்சியில் தான் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ரூ.பல கோடிக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். 744 ரோடு பணிகள் நடக்கின்றன. அந்தத் தொகுதியில் முதல்வர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி உறுதி. மதுரைக்கு தேவையான உள்கட்டமைப்பு குறித்து எம்.பி., வெங்கடேசன் கூறியது பற்றி அவரிடமே கேட்க வேண்டும். அரசு உத்தரவை தான் அதிகாரிகள் நிறைவேற்றுவர். தனிப்பட்ட நபர் சொல்வதை செய்ய மாட்டார்கள். யாரிடமும் எந்த பாகுபாடும், அரசியலும் பார்க்கவில்லை. மதுரை மாஸ்டர் பிளானை முதல்வர் இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடுவார். 'ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில்' மதுரை வடக்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் 2 லட்சத்து 4 ஆயிரத்து 558 குடும்பங்கள் இணைந்துள்ளன. 5 லட்சத்து 54 ஆயிரத்து 745 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். முதல்வர் உத்தரவுப்படி செப்.15 ல் 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என்ற உறுதிமொழி ஏற்கப்படும். செப். 17 ல் கரூரில் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும். அதையடுத்து செப். 20ல் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வாடிப்பட்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முப்பெரும் விழா தீர்மானங்கள் விளக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி