பால்குடியில் தண்ணீருக்கு பஞ்சம் குழாய் உடைப்பால் வீணாவதால்
கொட்டாம்பட்டி: பால்குடியில் மேல்நிலைத் தொட்டியில் இருந்து தெருக் குழாய்களுக்கு செல்லும் குழாய் உடைப்பால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இக்கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் மந்தை அருகே ஆழ்துளை கிணறு அமைத்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டி, கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் குழாய்கள் துருப்பிடித்து உடைந்தது. அதனால் தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. அதேநேரம் பொது மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.செல்வம் என்பவர் கூறியதாவது: இருவாரங்களுக்கு மேலாக மேல்நிலை தொட்டியில் இருந்து விநியோகிக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தெருக் குழாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. தண்ணீருக்காக மக்கள் அனைவரும் தொட்டியின் கீழ் சேறு, சகதி, புதர் மண்டிய பகுதியில் வீணாகும் நீரைப் பிடிக்க முண்டியடிக்கின்றனர். இதனால் வாக்குவாதம், தகராறு ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் பல கி.மீ.,க்கு அலைந்து திரிவதால் மாணவர்கள், பொதுமக்கள் பள்ளி, வேலைக்கு செல்ல இயலவில்லை. ஊராட்சி செயலரிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை என்றார்.ஊராட்சி செயலர் சசிகுமார் கூறுகையில், உடனே குழாய் உடைப்பு சரி செய்யப்படும்என்றார்.