மகளிர் சுகாதார வளாகம் வேண்டும்
சோழவந்தான் : சோழவந்தான் அருகே காடுபட்டியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த சுமதி கூறியதாவது: இங்குள்ள ஜல்லிக்கட்டு தெருவில் 20 ஆண்டுகளாக மகளிர் சுகாதார வளாகம் செயல்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஊராட்சி அலுவலகம் கட்டியபோது, பாதை இல்லாததால் சுகாதார வளாகம் இடிக்கப்பட்டு பாதையாக மாற்றப்பட்டது. ஊராட்சி சார்பில் பயனாளிகள் சிலருக்கு மட்டுமே கழிவறை வசதி செய்யப்பட்டது. இதனால் இப்பகுதி பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இரவில் நாய்கள், விஷ ஜந்துக்கள், போதை ஆசாமிகள் தொல்லையால் மிகுந்த மன உளைச்சல் அடைகிறோம். இடித்ததையடுத்து இப்பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.