உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எங்கிட்டு போய் எங்கிட்டு வர்றது..: மருத்துவமனையை சுற்றிவரும் நோயாளிகள்: பழசா, புதுசா... வார்டு எண்களில் குழப்பம்

எங்கிட்டு போய் எங்கிட்டு வர்றது..: மருத்துவமனையை சுற்றிவரும் நோயாளிகள்: பழசா, புதுசா... வார்டு எண்களில் குழப்பம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் வார்டு எண்கள் மாற்றப்பட்டு ஓராண்டான நிலையில் இன்னமும் பழைய வார்டு எண்ணை புறநோயாளிகள் சீட்டில் குறிப்பிட்டு எழுதுவதால் நோயாளிகள் அதனைத் தேடி வார்டு வார்டாக சுற்றுகின்றனர்.2024 ஏப்ரலில் டீன் ரத்தினவேல் ஓய்வு பெறும் போது அரசு மருத்துவமனை வளாகம், தீவிர விபத்து பிரிவு (டி.சி.சி.,), பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகங்களுக்கு (எஸ்.எஸ்.பி.,) 100 முதல் 800 வரையான எண்களை மாற்றிச் சென்றார். அவசர கதியில் சில இடங்களில் பழைய வார்டு எண் மாற்றப்பட்டு புதிய எண் எழுதப்பட்டது. சில இடங்களில் பழைய, புதிய எண்கள் அருகருகே எழுதப்பட்டுள்ளது.தினமும் 10 ஆயிரம் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். புறநோயாளிகள் சீட்டு பதியும் இடத்தில் எந்த வார்டு செல்ல வேண்டும் என புதிய எண்ணை எழுதித் தருகின்றனர். அந்த வார்டு எண் குறித்து ஒவ்வொரு பணியாளரிடமும் நோயாளிகள் விசாரிக்கின்றனர். வார்டின் புதிய எண் பெரும்பாலான பணியாளர்களுக்கே தெரியாததால் எந்த நோய்க்கு என கேட்டு அதன்படி வழிகாட்டுகின்றனர்.நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு ரத்தம், சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. பரிசோதனைக்கு பின் மாத்திரை கொடுக்கும் போது சீட்டில் பழைய எண்ணை குறிப்பிட்டு டாக்டர், நர்ஸ்கள் எழுதுகின்றனர். உதாரணமாக மாத்திரை கொடுக்கும் இடம் 28 வது வார்டு என்றிருந்தது, தற்போது 228 என மாற்றப்பட்டுள்ளது. நோயாளிகள் 28 வது வார்டு என்று பணியாளர்களிடம் கேட்டால் பழைய வார்டு எண்ணை நினைத்து இடது, வலது, யூ டர்ன் என சொல்லி அனுப்புகின்றனர். அங்கு சென்று பார்த்தால் 228 என எழுதப்பட்டிருப்பதால் குழப்பத்துடன் மறுபடியும் சுற்றுகின்றனர். இப்படி தினமும் பலர் மருத்துவமனையில் வார்டைத் தேடி அலைவதிலேயே நேரத்தை கழிக்கின்றனர்.நோயாளிகளுக்கு வழிகாட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் 12 இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அனைவரும் புதியவர்கள் என்பதால் பழைய எண்கள் தெரிவதில்லை. ஆள் அரவமற்ற பகுதியில் மையம் உள்ளதாலும் பயனில்லை. வார்டு எண் குழப்பம் குறித்து டீன் அருள்சுந்தரேஷ்குமாரிடம் கேட்டபோது, ''அனைத்து பணியாளர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும். உதவி மையங்கள் தேவைப்படும் இடங்களில் மாற்றி வைக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை