உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பாண்டியர் கால தவ்வை சன்னதி குன்றத்தில் வழிபாட்டிற்கு திறக்கப்படுமா

 பாண்டியர் கால தவ்வை சன்னதி குன்றத்தில் வழிபாட்டிற்கு திறக்கப்படுமா

திருப்பரங்குன்றம்: ''திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தவ்வை (ஜேஷ்டா தேவி) சன்னதியை மீண்டும் திறக்க வேண்டும்'' என பாண்டியர் கால சின்னங்கள், மறைந்து போன வழிபாட்டு மரபுகளை ஆய்வு செய்யும் 'பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு' கோரிக்கை விடுத்துள்ளது. குழுவின் முதன்மை ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது: இக்கோயிலில் ஜேஷ்டாதேவி சன்னதி, கம்பத்தடி மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ளது. அப்பகுதியில் உள்ள சிறிய நுழைவாயில் வழியாக சென்றால் 100 மீட்டர் நீளமுள்ள இருட்டான குகைப் பாதையில் குடைவரை சிற்பமாக தவ்வை தேவியின் உருவம் உள்ளது. பாண்டியர் கால சிற்பம் தவ்வை இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில், வலது கையில் தாமரை மலர், இடது கையில் மகளின் தொடையை தொடும் போக்கில் அமைந்துள்ளது. வலப்புறத்தில் எருமைத்தலை மகனும், இடப்புறத்தில் மகளும் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் பாண்டியர் காலப் பாணியிலான புடைப்புச் சிற்பங்கள். கி.பி. 8ம் நுாற்றாண்டில் பாண்டிய மன்னர் பராந்தக நெடுஞ்சடைய பாண்டியன் காலத்தில் அவரது தளபதி சாந்தன் கணபதியின் மனைவி நக்கன்கொற்றி என்பவரால் இச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது எனக் கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. பல நுாற்றாண்டுகளாக பூஜையின்றி இருப்பதாக அறிந்து, 2021ல் பாண்டியர்களைத் தேடி பயணம் வரலாற்று குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது கும்பாபிஷேகத்திற்கு பின்பு சன்னதி திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் கும்பாபிஷேகம் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. வழிபாடு உயிர்பெறும் ஆய்வுக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், விஜயநகர உஜ்ஜுனா டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த சன்னதி பாண்டிய நாட்டின் கலாசார மரபின் சின்னம். இந்த சன்னதியைத் திறந்து தரிசனத்திற்கு கொண்டுவந்தால், மறைந்துபோன தவ்வை வழிபாடு மீண்டும் உயிர் பெறும். பழமையான தவ்வை வழிபாடு இன்றும் பல இடங்களில் நடக்கிறது. ஆனால் பாண்டிய நாட்டில் குடைவரைச் சிற்பமாய் தனி சன்னதி அமைந்துள்ள இந்த இடம் திறக்கப்பட்டால் வரலாற்று, கலாசார முக்கியத்துவம் மிக்கதாக மாறும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ