உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பால் விலையை நிர்ணயம் செய்வதில் சத்திய சோதனை முட்டுக்கட்டையை தகர்க்குமா ஆவின்

பால் விலையை நிர்ணயம் செய்வதில் சத்திய சோதனை முட்டுக்கட்டையை தகர்க்குமா ஆவின்

மதுரை: மதுரையில் ஆவின் பால் தரம், எடை பரிசோதனையில் மாறுபட்ட முடிவுகள் கிடைப்பதால் பால் விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.மதுரை ஆவின், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. இப்பால் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள 52 பி.எம்.சி.,களில் (மொத்த பால் குளிர்விப்பான்) பெறப்பட்டு டேங்கர்கள் மூலம் மைய அலுவலகத்திற்கு கொண்டுவரப்படுகிறது.உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரம், எடை அளவை பி.எம்.சி., நடத்துவோர், ஆவின் அலுவலர்களின் 'ஸ்பாட் அக்னாலஜ்மென்ட்', மைய அலுவலகம் லேப் என மூன்று இடங்களில் சோதனை செய்யப்படுகின்றன. இதில் பால் கொழுப்பு, இதர சத்துகள் அளவு அடிப்படையில் ஒரு லிட்டருக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் பாலை சோதனை செய்யும் மூன்று இடங்களிலும் சோதனை முடிவுகள் மாறுபடுவதால் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.அவர்கள் கூறியதாவது: ஆவின் அலுவலர்கள் சார்பில் பி.எம்.சி., யிலேயே எடையளவு செய்து விலை நிர்ணயம் செய்யும் வரை பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது முறையாக அது நடப்பதில்லை. இதனிடைய பி.எம்.சி., நடத்துவோரும், மெயின் அலுவலக 'லேப்'பிலும் பால்மானி (லேக்டோ மீட்டர்) மூலம் அளக்கப்படுகிறது. ஒரே வகை லேக்டோ மீட்டர்கள் பயன்படுத்தப்பட்டாலும் சோதனை முடிவில் மாற்றம் ஏற்படுகிறது.இதுபோல் பி.எம்.சி.,களில் இருந்து பாலை எடுத்துவரப் பயன்படுத்தப்படும் டேங்கர் லாரிகளில் பால் எடையளக்கும் (புளோர் மீட்டர்) கருவி பொருத்தப்பட்டால் பி.எம்.சி.,களில் இருந்து மெயின் அலுவலகம் வரும் வழியில் ஏற்படும் பால் எடை குறைவு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். லேக்டோ மீட்டர் அளவில் ஏற்படும் சந்தேகம், பால் எடையளக்கும் கருவி பொருத்த விடாமல் அதிகாரிகள் சிலர் முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது. உற்பத்தியாளர்கள் நலன் கருதி இதுபோன்ற பிரச்னைகளுக்கு பொது மேலாளர் (ஜி.எம்.) சிவகாமி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ