ரூ.18,000 லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.,வுக்கு காப்பு
மதுரை:வாரிசு சான்று வழங்க, தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் பெண்ணிடம், 18,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது கணவர் கணேசன், 2019ல் இறந்தார். இரு மகன்கள் உள்ளனர். விராதனுாரில் உள்ள கணவரின் சொத்துக்களை விற்க முருகேஸ்வரி முடிவு செய்தார். அதற்காக, வாரிசு சான்றிதழ் பெற, ஏப்., 1ல் ஆன்லைனில் விண்ணப்பித்தார். விராதனுார் வி.ஏ.ஓ., இந்திரா, 46, விண்ணப்பத்தை காரணமின்றி நிராகரித்தார். நேரில் விசாரிக்க சென்ற முருகேஸ்வரியிடம், மீண்டும் விண்ணப்பிக்குமாறு கூறினார். ஏப்., 23ல் முருகேஸ்வரி விண்ணப்பித்துவிட்டு, மே 1ல் நேரில் சென்றபோது, இந்திரா, 18,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத முருகேஸ்வரி, நேற்று காலை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் புகார் செய்தார். அண்ணாநகர் - வண்டியூர் ரோடு சந்திப்பு அருகே முருகேஸ்வரியை வரவழைத்து, அவரிடம், 18,000 ரூபாயை வாங்கிய போது, இந்திராவை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.