| ADDED : நவ 15, 2025 05:12 AM
மதுரை: தி.மு.க., போல் மதுரை த.வெ.க.,விலும் குடும்ப அரசியல் தலையெடுத்துள்ளது. நிர்வாகிகளின் குடும்ப பெண்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என மகளிரணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை த.வெ.க.,வில் ஒருவாரத்திற்கு முன்புவரை மகளிரணிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் மகளிரணியைச் சேர்ந்தவர்கள் எந்த பலனும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை சொந்த செலவில் செய்தனர். மகளிரணியில் உள்ள பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படும் போது தங்களது உழைப்பை அங்கீரித்து பதவி வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்த நிலையில், மதுரை வடக்கு மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை அமைப்பாளர், இணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிரணியினர் கூறியதாவது: எங்கள் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு எதிர்காலத்தில் கவுன்சிலர் பதவி, மாநில பதவி பெற்றுத்தரப்படும் என பொறுப்பில் உள்ளவர்கள் உறுதியளித்தனர். இதை நம்பி குடும்பத்தை மறந்து கட்சிக்காக கடுமையாக உழைத்தோம். இந்நிலையில் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பதவிகள் வழங்கவும் ஏற்பாடு நடக்கிறது. மகளிரணியை மாவட்ட செயலாளர் கல்லாணை துச்சமாக மதிக்கிறார். கடந்தவாரம் நடந்த கூட்டத்தில் எங்களை அவர் பொருட்படுத்தவே இல்லை. விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு கூறினர். ஆதாரமற்ற குற்றச்சாட்டு மாவட்ட செயலாளர் கல்லாணை கூறியதாவது: மகளிரணியில் உள்ள சிலருக்கும், அவர்கள் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் உள்ள பிரச்னையை திசை திருப்புகிறார்கள். என் உழைப்பு குறித்து தலைவர் விஜய்க்கும், பொதுச்செயலாளர் ஆனந்த்திற்கும் தெரியும். பணம் வாங்கியதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கட்சியில் சேர்ந்தவுடனே பதவி வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பொறுமையுடன் உழைத்தால் விஜய் பதவி தருவார். அப்படி உழைத்த பெண்களுக்குதான் தலைமை ஆராய்ந்து பதவி வழங்கியுள்ளது. இதையும் குடும்ப அரசியல் என திசைதிருப்புகிறார்கள் என்றார்.