உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழிலாளி மரணம்: இருவர் கைது

தொழிலாளி மரணம்: இருவர் கைது

சோழவந்தான்: வாடிப்பட்டி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அமலதாஸ் 45, இவரது நண்பர் அக்னி 29, இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்கள் இருவரும் சிறுமலையில் உள்ள கணேசன் 50, என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டை சுத்தம் செய்யும் பணிக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மாயமானது. பணிக்கு வந்த இருவர்தான் திருடியிருப்பார்கள் என கணேசன் சந்தேகமடைந்தார். அக்.25ல் தனது நண்பரான சோழவந்தான் பேட்டையைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஸ்ரீதர் 53, வீட்டிற்கு அமலதாஸ், அக்னி இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தார். பின் இருவரையும் விடுவித்த நிலையில், அமலதாஸ் திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று உடல்வலிக்கு சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் (அக்.26) வயிற்று வலியால் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் சந்தேக மரணமாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அமலதாஸ் மனைவி ஆச்சிப்பொண்ணு 42, தனது கணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற கணேசன், ஸ்ரீதர் இருவரும் அடித்தனர். அதனால் தான் இறந்தார், என புகாரளித்தார். இதையடுத்து வழக்கு சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து கணேசன், ஸ்ரீதர் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி