உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிளஸ் 2வுக்கு பின் 80க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வு எழுதலாம்

பிளஸ் 2வுக்கு பின் 80க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வு எழுதலாம்

பிளஸ் 2வுக்கு பின் 80க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுதும் வாய்ப்பு உள்ளது என மதுரையில் தினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு நாள் காலை அமர்வில் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் பேசினார்.மதுரை தமுக்கம் மைாதனத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:மாணவர்கள் கல்வியை இனிமையான பயணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது கல்விக்கான செலவிடுதல் அதிகரித்து விட்டது. இந்தியாவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 28.7 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் இதன் எண்ணிக்கை அதிகம். தொழில்நுட்பங்கள் மாறும் போது அதற்கேற்ப திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட திறமைகள் இருந்தால் மட்டுமே மாணவர்கள் வெற்றியாளராக பயணிக்க முடியும். தொழில்நுட்பங்கள் மாறுவது காலத்தின் கட்டாயம். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் புதிய தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை மாற்றப்போகிறது.தற்போது உலகளவில் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பிரபல கம்பெனிகளில் இருந்து பலர் திடீரென வெளியேற்றப்படுகின்றனர். இதற்கு அவர்கள் தங்களை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அப்டேட் பண்ணிக்கொள்ளாததே காரணம். பல நிறுவனங்கள் இதுபோன்ற எண்ணத்திற்கு வந்துவிட்டன.தற்போதைய உயர்கல்வி பாடங்கள் சொல்லித்தருதல், ஆய்வு தொடர்பானவை என இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி தொடர்பாக கற்பிக்கப்படும் கல்வியால் தான் வருங்காலத்தை நாம் எதிர்நோக்க முடியும். எனவே அதுபோன்ற படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து துறைகளிலும் தற்போது ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர்கின்றன. இந்நிலையில் கல்வி வேலைக்கானதாக இல்லாமல் எந்த பகுதிக்கு சென்றாலும் அச்சூழலில் வாழும் தன்னம்பிக்கையை தரும் கல்வியாக இருக்க வேண்டும்.பலர் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து சாதித்து வருகின்றனர். அவர்கள் வெற்றிக்கு பின் பிரச்னைக்கான தீர்வு தேடியதால் தான் சாதிக்க முடிந்தது.ஜெ.இ.இ., நுழைவு தேர்வுகளில் இன்னும் சாய்ஸ் பில்லிங்கில் தவறு செய்து பல மாணவர்கள் கல்லுாரி படிப்பு வாய்ப்பை இழக்கின்றனர். மருத்துவம், பொறியியல் தவிர பிளஸ் 2வுக்கு பின் 80க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் அரசு துறைகளுக்கு நடக்கின்றன. அதை மாணவர்கள் எழுதலாம். இதில் 75 ல் பிளஸ் 2 மதிப்பெண்களை பார்ப்பதில்லை. தேர்ச்சி பெற்றால் போதும். அதிக நுழைவுத்தேர்வுகளை எழுதுங்கள்.

மாற்றி யோசித்தால் கலக்கலாம்

'மீடியா அனிமேஷன், வி.எப்.எக்ஸ்., கேமிங்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசியர் கிேஷார் குமார் பேசியதாவது:டிஜிட்டல் லேர்னிங், இ லேர்னிங் துறைகளில் ஏராள வேலைவாய்ப்புகள் உள்ளன. அனிமேஷன் படித்தவர்கள் அதிகம் தேவையாக உள்ளனர். தற்போது 3 டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் முழு சினிமாவை ஒரு அறைக்குள் இருந்து எடுத்துவிடலாம். 'ஸ்கிரீனுக்கு' முன் உள்ளதை விட 'ஸ்கிரீனுக்கு' பின் உள்ள வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதற்கு சாப்ட்வேர் டெக்னாலஜி அதிகம் தேவை. கேமிங் பிரிவில் ஓவியம் வரைதல், டிசைன், டெலவப்மென்ட் பிரிவுகளில் அதிக தேவைகள் உள்ளன.தற்போது 'இ காமர்ஸ்' பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இதற்கெல்லாம் மொபைல் அப்ளிகேஷன் தான் அடிப்படை. திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்புகளில் எடிட்டிங், காஸ்டியூம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் எப்போதுமே வேலைவாய்ப்புகள் உள்ளன. எதிர்காலம் தொழில்நுட்பங்கள் நிறைந்ததாக வரவுள்ளது. அதற்கேற்ப திறமைகளை வளர்த்துக்கொண்டால் தான் சாதிக்க முடியும்.வித்தியாசமாக சிந்திப்பவர்கள், ஓவியம் வரைய தெரிந்தவர்கள் இத்துறை படிப்புகளை தேர்வு செய்யலாம். பிளஸ் 2வில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் போதுமானது. கட்டமைப்புகள் உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் வேண்டும். படிக்கும் போதே புதுப்புது தொழில்நுட்பங்களை ஆன்லைன் தளங்களில் கற்றுக்கொள்ள வேண்டும்.

படிப்புடன் பன்முக திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

'கலை அறிவியல்' குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சித்ரா பேசியதாவது:நம் நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோர் கடமை என்ற மனப்பான்மை இன்னும் உள்ளது. உலகத்தை மாற்றக் கூடிய சக்தி கல்விக்கு தான் உள்ளது.தற்போதைய கல்விச் சூழலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைக்கு அதிக தேவை உள்ளது. கலை அறிவியல், பொறியியலில் உள்ள பல பிரிவுகள் பெரும்பாலும் 75 சதவீதம் பாடத்திட்டம் பொதுவாகத்தான் உள்ளது. 25 சதவீதம் மட்டுமே மாற்றம் இருக்கும். எனவே ஒரு பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் பிரிவை தேர்வு செய்யலாம். தன்னாட்சி கல்லுாரிகளில் தான் பாடத்திட்டங்கள் அதிகம் 'அப்டேட்' செய்யப்படுகின்றன.அதுபோல் டேட்டா சயின்ஸ், வணிகவியல், மேலாண்மை, அறிவியலில் மைக்ரோ பயாலஜி, தடயவியல், உளவியல், தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடம் என அனைத்துக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மாணவர்கள் பிடிக்கும் படிப்பை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக கல்லுாரிகள் தொழிற்சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனவா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கிரியேட்டிவ் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். கல்லுாரி படிப்பில் பன்முக திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்லைனில் அதிக கோர்ஸ்கள் உள்ளன. அதையும் படிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளின் தேவைகள் என்ன

டெக் மகேந்திரா துணைத் தலைவர் தினேஷ் வேணுகோபால் பேசியதாவது:இது தொழில்நுட்பங்களின் புரட்சிக்காலம். ஏ.ஐ., மிஷின் லேர்னிங், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன், குவாண்டம், கிளவுடு கம்ப்யூட்டிங், பயோ டெக் அன்ட் ஹெல்த் டெக், ஐ.ஓ.டி., நெட் ஒர்க்கிங்ஸ், கிரீன் டெக்னாலஜி, சைபர் செக்கியூரிட்டி உள்ளிட்ட துறைகள் தான் தொழில் நுட்ப புரட்சி காலத்தை நிர்ணயிக்க போகும் துறைகள். இவற்றில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்யலாம். இவற்றில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு உத்தரவாதம்.எந்த வேலையும் பாதுகாப்பானது இல்லை. 100 வேலைக்கு 10 பேர் போட்டி என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது 10 ஆயிரம் பேராக மாறியுள்ளது. தற்போது ஏ.ஐ., அதிகம் தேவையாக உள்ளது. எந்த முடிவுகளையும் விரைவாக எடுக்கும் வகையில் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.எந்த கல்லுாரிகளிலும் படிக்கலாம். ஆனால் நிறுவனங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறமைகள் அவசியம். குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் நுாற்றுக்கு 65 பேர் தான் தற்போது உள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் தேவைப்படுவர். இதுபோல் தான் கிளவுட் கம்ப்யூட்டிங், நெட் ஒர்க்கிங் உள்ளிட்ட துறைகளில் தேவை அதிகரித்துள்ளது.படித்தவுடன் அதுதொடர்பான புராஜெக்ட்டுகளை தயாரியுங்கள். நிறுவனங்கள் உங்கள் மதிப்பெண்களை பார்க்க போவதில்லை. உங்களுடைய பங்களிப்பை தான் பார்க்கும். அதற்கு ஏற்ப உங்களை மேம்படுத்துங்கள் என்றார்.இந்நிகழ்ச்சிக்கு 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்பட்டன. மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.எச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை