கூலி தொழிலாளி அடித்து கொலை; சித்தப்பா உள்ளிட்ட மூவர் கைது
மயிலாடுதுறை : சொத்து பிரச்னையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த சித்தப்பா உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வடகாளி கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் கலியமூர்த்தி,57; கூலி தொழிலாளி. இவரது மனைவி 20 ஆண்டிற்கு முன் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், இரு மகள்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது தாய் பார்வதியுடன் வசித்து வந்தார். கலியமூர்த்தியின் வீட்டை, அவரது சித்தப்பா சுப்ரமணியன்,90; மற்றும் அவரது குடும்பத்தினர் எழுதி தரக்கேட்டு தகராறு செய்து வந்தனர். சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட கலியமூர்த்தி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சுப்ரமணியன், அவரது மகன் கருணாநிதி,49; மருமகன் சேட்டு,59; ஆகியோர் நேற்று முன்தினம், வயலுக்கு சென்ற கலியமூர்த்தியை இழுத்து சென்று, வாழை தோப்பில் கட்டி வைத்து கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே சுப்ரமணி உள்ளிட்ட மூவரும் தப்பி ஓடிவிட்டனர்.படுகாயமடைந்திருந்த கலியமூர்த்தியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து கலியமூர்த்தியின் தாய் பார்வதி அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியன், கருணாநிதி, சேட்டு ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.