உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / ஆமைவேகத்தில் கதவணை அமைக்கும் பணி

ஆமைவேகத்தில் கதவணை அமைக்கும் பணி

மயிலாடுதுறை மாவட்டம், பழையாறு பகுதியில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கிறது. வெள்ள காலங்களில் சேமிக்கவும், கடல் நீர் உட்புகுவதை தடுக்கவும், கதவணை அமைக்க விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், திருச்சிற்றம்பலம் ஊராட்சி, குமாரமங்கலம்- -- ஆதனுார் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க, 2014ல் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.அதன்படி, 2019ல், அங்கு 463 கோடி ரூபாயில் பிரமாண்டமான கதவணை அமைக்கும் பணி துவங்கியது.பொதுப்பணித்துறை கும்பகோணம் கோட்டம் சிறப்பு திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம், 1 கி.மீ., நீளத்தில், கதவணை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த கதவணை வழியாக, 4 லட்சத்து 64,000 கனஅடி வரை உபரிநீரை பாதுகாப்பாக கடலுக்கு அனுப்ப முடியும். கதவணையில் உள்ள, 84 மதகுகளை அடைத்து, 1.4 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஏழு மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடலோர பகுதிகளான சீர்காழி, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில், 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்னைக்கு கதவணை வாயிலாக தீர்வு ஏற்படும்.மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், 26,000 ஏக்கர், கடலுார் மாவட்டத்தில், 29,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.ஒப்பந்தப்படி, கதவணை கட்டுமான பணிகள் 2022ல் முடிந்திருக்க வேண்டும். ஆனால், நில ஆர்ஜிதம், கொரோனா, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் பணி நடக்கிறது. தற்போதைய நிலையில், 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் முழுமையாக முடிவடையாததால், தற்போது கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்துள்ள தண்ணீரை தேக்க முடியாத நிலை உள்ளது.அரசு விரைந்து பணிகளை முடித்து கதவணையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், கொள்ளிடம் ஆற்றில் 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு கதவணை அமைக்க வேண்டும் என, விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை