சில ரயில்கள் ரத்து.. மாற்று வழியில் இயக்கம்; மயிலாடுதுறையில் பயணிகள் குழப்பம்
மயிலாடுதுறை: பெஞ்சல் புயல் மற்றும் பலத்த மழையால் விழுப்புரம் மார்க்கத்தில் சில ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், சில ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதால், மயிலாடுதுறை ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.கனமழையின் காரணமாக விழுப்புரம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்னை சென்ற உழவன், மண்ணை, கம்பன், அந்தியோதயா ரயில்கள் அனைத்தும் காட்பாடி வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களும் காட்பாடி வழியாக சென்னைக்கு சென்றன. எக்மோரில் இருந்து திருச்சி வரும் சோழன் எக்ஸ்பிரஸ், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் விழுப்புரத்தில் இருந்து இருந்து தாம்பரம் செல்லும் ரயில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வந்தே பாரத், தேஜாஸ், எக்மோரில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக அயோத்தியா செல்கிறது. இந்நிலையில், கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் செல்லும் 06185 என்ற ரயில் விழுப்புரம் வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மயிலாடுதுறைக்கு இன்று காலை 7.30 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் காலை 9 மணிக்கு வந்து சேரும் என சொல்லப்பட்ட நிலையில், இந்த ரயில் தற்போது மயிலாடுதுறையோடு நிறுத்தப்படுவதாக மயிலாடுதுறை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயிலில் சென்னைக்கு பயணம் செய்ய வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் பலரும் திரும்பி சென்றனர். பலர் விழுப்புரம் செல்வதற்காக காலை 7:30 மணிக்கு வந்தவர்கள், தற்போது வரை ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். இவ்வாறு பல ரயில்கள் நேரமாற்றம், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மயிலாடுதுறைக்கு வந்த ரயில் பயணிகள் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல, கோயம்புத்தூர் - சென்னை விரைவு ரயில் காலை 10:30 மணிக்கு மயிலாடுதுறையுடன் நிறுத்தப்பட்டது.