உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / தி.மு.க., பஞ். தலைவர் தலைமையில் நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தி.மு.க., பஞ். தலைவர் தலைமையில் நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லுார் ஊராட்சியில் 5,000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். தி.மு.க.,வை சேர்ந்த மகேஸ்வரன், 44, பஞ்., தலைவராக உள்ளார். கடந்த, 2ம் தேதி தமிழக அரசு அறிவித்த, 'கனவு இல்லம்' மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது.நேற்று காலை பஞ்., தலைவர் மகேஸ்வரன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட பெண்கள், கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். 'நுாறு நாட்கள் வேலை அளிக்கப்படாததால் ஏழை கூலி தொழிலாளர்கள் வறுமையில் சிக்கி உள்ளனர். குடிசைகள் நிறைந்த தங்கள் ஊராட்சிக்கு, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அரசின் நலத்திட்டங்கள் எதுவும் ஊராட்சிக்கு கிடைக்காமல் உள்ளது' என, கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.மதியம், 1:00 மணி வரை காத்திருந்தும் கலெக்டர் வராததால், டி.ஆர்.ஓ., பேபியை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற டி.ஆர்.ஓ., பேபி, 'டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலரிடம் தான் மனு அளிக்க வேண்டும். என்னிடம் வழங்க கூடாது' என, திருப்பி அனுப்பினார். ஆவேசமடைந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார், ஆளுங்கட்சி பஞ்., தலைவர் மகேஸ்வரன் மற்றும் சிலரை டி.ஆர்.டி.ஏ., அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கும் அதிகாரிகள் இல்லாததால், முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். மதியம், 2:30 வரை போராட்டம் நீடித்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை